×

அதிமுக ஆட்சி காலத்தில் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 100 பட்டுப்புடவைகள் உட்பட ரூ.62 லட்சம் மதிப்பிலான ஜவுளிகள் மாயம்: உயர்அதிகாரி தலைமையில் விசாரணை

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 100 பட்டுப்புடவைகள் உட்பட ரூ.62 லட்சம் மதிப்பிலான ஜவுளி பொருட்கள் மாயமாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கோஆப்டெக்ஸ் உயர் அதிகாரி ஒருவர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் தலைமை செயலக வளாகத்தில் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் உள்ளது. இந்த விற்பனை நிலையத்தில்,பட்டுப்புடவை, காட்டன் சேலை, பருத்தி சேலை, வேஷ்டி, சட்டை, படுக்கை விரிப்புகள்,போர்வை, தலையணை உட்பட பல்வேறு ரகங்களின் ஜவுளி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்த பொறுப்பாளர் ஒருவர் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பவர்புல்லாக இருந்ததாக தெரிகிறது. இதனால், அவர் மீது ஏராளமான புகார் வந்த நிலையில் கடந்த ஆட்சியில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், மாற்றப்பட்ட சில நாட்களிலேயே மீண்டும் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும்  அதே இடத்தில் பணியாற்றி வந்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அவர் மீதான புகாரின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவர் கடலூருக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அந்த விற்பனை நிலையத்துக்கு புதிதாக பொறுப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

அவர், பொறுப்பேற்கும் போது, அதிகாரி ஒருவரின் கண்காணிப்பின் கீழ், ஜவுளி பொருட்கள் எவ்வளவு இருக்கிறது என்பது தொடர்பாக சரிபார்த்தப்பிறகே அந்த பொறுப்பை ஏற்க வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்யும் போது, ரூ.62 லட்சம் மதிப்பிலான ஜவுளி பொருட்கள் காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது. இதில், 100 பட்டுப்புடவைகள்  எங்கே சென்றது என்றே தெரியவில்லை. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரி, இவ்விவகாரம் தொடர்பாக மேலாண்மை இயக்குனர் ராஜேஷ்க்கு தகவல் தெரிவித்து இருப்பதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் இவ்விவகாரம் தொடர்பாக தற்போது விசாரணை நடத்த ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். இது, கோஆப்டெக்ஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Cooptex ,AIADMK , Textiles worth Rs 62 lakh, including 100 silks, at Cooptex outlet during AIADMK rule: Inquiry led by senior official
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி