×

படாளம் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி துவக்கம்: எம்எல்ஏ க.சுந்தர் தொடங்கி வைத்தார்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி நேற்று தொடங்கியது. இதனை, க.சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிமுக ஆட்சியின்போது ஏற்பட்ட முறைகேடு காரணமாக மூடப்பட்டது. கடந்த திமுக ஆட்சியின்போது மறைந்த திமுக தலைவர் கலைஞர் நிதி ஒதுக்கீடு செய்து, மீண்டும் ஆலை புனரமைப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து, 2011ம் ஆண்டு துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், சர்க்கரை ஆலையை திறந்து வைத்தார். இதையடுத்து கரும்பு அரவை செய்து சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர், அதிமுக ஆட்சி அமைந்ததும், சர்க்கரை ஆலை மூடப்பட்டது.

மீண்டும் திமுக ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த சர்க்கரை ஆலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதையொட்டி மதுராந்தகம், உத்திரமேரூர், அச்சிறுப்பாக்கம், செய்யூர், பவுஞ்சூர், திண்டிவனம் உள்பட பல பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், சுமார் 2 லட்சம் டன் கரும்புகளை பயிர் செய்து வெட்டுவதற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்நிலையில், மதுராந்தகம் சர்க்கரை ஆலையில், நேற்று காலை அரவை பணி தொடங்கும் நிகழ்ச்சி சர்க்கரை ஆலை வளாகத்தில் நடந்தது.

காஞ்சி தெற்கு திமுக மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கரும்பு கட்டுகளை இயந்திரங்களில் போட்டு அரவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நேற்று மட்டும் 2,500 டன் கரும்புகள் வெட்டப்பட்டு டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் படாளம் சர்க்கரை ஆலைக்கு கொண்டு வரப்பட்டன. நிகழ்ச்சியில் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு தலைவர் அப்பாதுரை, மேலாண் இயக்குனர் ஜவகர் பிரசாத்ராஜ், திமுக ஒன்றிய செயலாளர் சத்யசாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : MLA K. Sundar , Sugar mill, cane crushing work,
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது