×

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டத்துக்கு செல்லும் விமான டிக்கெட் கடும் உயர்வு.!

மீனம்பாக்கம்: தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையில் வசித்துவரும் தென்மாநில மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பஸ், ரயில் மற்றும் விமானங்களில் செல்கின்றனர். தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், கொச்சி செல்லும் விமானங்களில்  இன்றும் நாளையும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் 4 விமானங்களும் மதுரைக்கு 6 விமானங்களும் திருவனந்தபுரத்துக்கு 2 விமானங்களும் கொச்சிக்கு 2 விமானங்களும் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் பெரும்பாலான சீட்கள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.

சில சீட்கள் மட்டுமே உள்ளன. இதையடுத்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் இந்த விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து தூத்தூக்குடிக்கு வழக்கமான டிக்கெட் கட்டணம் ரூ.3,500. இன்று 10,500ம், கிறிஸ்துமஸ்க்கு முந்தின நாள் 24ம் தேதி பயணிக்க ரூ.12 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. மதுரைக்கு வழக்கமான கட்டணம் ரூ.3,500. ஆனால் அது ரூ.9,800 வரை அதிகரித்துள்ளது. திருவனந்தபுரம் செல்ல சாதாரண நாட்களில் ரூ.4 ஆயிரம். தற்போது ரூ.9  ஆயிரமாக அதிகரித்துள்ளது. கொச்சிக்கு செல்ல வழக்கமான கட்டணம் ரூ.3,500ல் இருந்து தற்போது ரூ.9,500 வரை வசூலிக்கப்படுகிறது. இதுபோல் சென்னையில் இருந்து கோவா செல்லும் விமானங்களிலும் கட்டணங்கள் இருமடங்கு உயர்ந்துள்ளது. இதுபற்றி விமான நிறுவனங்கள் கூறுகையில், ‘’நாங்கள் கட்டணங்களை உயர்த்தவில்லை. விமானங்களில் பல அடுக்கு கட்டணங்கள் உள்ளன. அதில் குறைந்த கட்டணம், மீடியம் கட்டணம் டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

தற்போது உயர்ந்துள்ள கட்டண சீட்கள் மட்டுமே உள்ளன. அதுதான் பயணிகளுக்கு கட்டண உயர்வுபோல் தெரிகிறது. இது வழக்கமான நடைமுறைதான்’ என்றனர். ‘’விமான நிறுவனங்கள் கூறுவது தவறான தகவல். பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி அனைத்து டிக்கெட்டுக்களையும்  உயர்ந்த கட்டண டிக்கெட்களாக மாற்றியுள்ளனர். தனியார் ஆம்னி பஸ்கள் கட்டணத்தை உயர்த்துவதுபோல், விமான நிறுவனங்களும் நடந்து கொள்கின்றன. எனவே, தமிழக அரசு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கின்றன. விமான கட்டணம் உயர்வு குறித்து ஒன்றிய அரசின் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பயணிகள் கூறுகின்றனர்.

Tags : Christmas , Air tickets to the southern district ahead of the Christmas fare hike.!
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...