×

ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறிய ‘கூழாங்கல்’

சென்னை: ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான ‘கூழாங்கல்’, ஆஸ்கர் போட்டியில் இடம்பெறவில்லை. நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த படம் ‘கூழாங்கல்’. இதை பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். ஏழை தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் ஒருநாள் சம்பவங்களுடன் உருவான இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள் வென்றுள்ளது. இந்நிலையில், வரும் 2022 மார்ச் 27ம் தேதி 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது போட்டிக்கு ‘கூழாங்கல்’ படம் பரிந்துரைக்கப்பட்டது. 93 நாடுகளில் இருந்து கலந்துகொண்ட 93 படங்களில் இருந்து 15 படங்கள்  இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ‘கூழாங்கல்’ படம் இடம்பெறவில்லை. இதுகுறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆஸ்கர் பட்டியலில் இப்படம் இடம்பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நல்ல படத்தைக் கொடுத்ததற்காக இயக்குனர் வினோத்ராஜை பாராட்ட வேண்டும். ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் எங்களது படத்தை தேர்வு செய்த இந்திய நடுவர் குழுவுக்கு எனது நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Oscars , ‘Pebble’ out of the Oscars
× RELATED கேன்ஸ் திரைப்பட விழா விருதுகளை குவித்த இந்திய திரையுலகம்