×

கேன்ஸ் திரைப்பட விழா விருதுகளை குவித்த இந்திய திரையுலகம்

கேன்ஸ்: உலக அளவில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவுக்கு அடுத்ததாக, ஒட்டுமொத்த திரைத்துறையில் புகழ்பெற்ற விழாவாக ‘கேன்ஸ் திரைப்பட விழா’ அமைந்துள்ளது. இது பிரான்ஸ் நாட்டிலுள்ள கேன்ஸ் நகரில் கடந்த 1946 முதல் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இவ்விழா, ஆடம்பரமான பேஷன் மற்றும் நேர்த்தியான ஆடை, அணிகலன்களை உலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரு தளமாகவும் மாறியுள்ளது. திரையுலகில் அதிக மதிப்பும், வரவேற்பும் கொண்ட விழாக்களில் இதுவும் ஒன்று. எனவே, அனைத்து மொழி திரையுலகினர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உலகம் முழுவதும் இருந்து வந்து விழாவில் கலந்துகொள்கின்றனர். 77வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 15ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. பல்வேறு பிரிவுகளில் பல இந்திய திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டன. இதில் சிறந்த குறும்படத்துக்கான முதல் பரிசை, இந்திய திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இயக்கிய ‘சன்பிளவர்’ வென்றது. 16 நிமிடங்கள் ஓடும் இதை மைசூர் சித்தானந்த் எஸ்.நாயக் இயக்கினார். புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தயாரித்தனர். மீரட் மாணவி மான்சி மகேஸ்வரி இயக்கிய ‘பன்னி ஹூட்’ என்ற குறும்படம் 3வது பரிசை வென்றது. முதல் பரிசு வென்ற ‘சன்பிளவர்ஸ்’ படக்குழுவுக்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை, ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ என்ற இந்திய திரைப்படம் வென்று சாதனை படைத்தது. 30 வருடங்களுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்படம் இது. மும்பை பாயல் கபாடியா இயக்கிய இதில் மலையாள நடிகைகள் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா நடித்துள்ளனர். கடந்த 23ம் தேதி திரையிடப்பட்ட இப்படத்தைப் பார்த்துவிட்டு, அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று 8 நிமிடங்கள் இடைவிடாமல் கைத்தட்டி பாராட்டினர். இப்படம் மும்பை, ரத்னகிரி ஆகிய பகுதிகளில் இந்தி மற்றும் மலையாளத்தில் படமாக்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 21 படங்களுடன் போட்டியிட்ட இப்படம், 38 வயது பாயல் கபாடியாவின் முதல் திரைப்படமாகும். முன்னதாக 2021ல் அவர் இயக்கிய ‘எ நைட் ஆப் நோயிங் நத்திங்’ என்ற ஆவணப்படத்துக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஐ விருது கிடைத்தது. பாயல் கபாடியாவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, நடிகர்கள் மம்மூட்டி, ேமாகன்லால் உள்பட பல்வேறு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருதை, இந்தியாவைச் சேர்ந்த அனசுயா சென்குப்தா வென்று சாதனை படைத்துள்ளார். இவ்விருதை பெறும் முதல் இந்தியர் அவர். பல்கேரியன் இயக்குனர் கான்ஸ்டான்டின் போஜனோவ் இயக்கிய ‘தி ஷேம்ெலஸ்’ என்ற படத்துக்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. முன்னதாக நடந்த விழாவில், உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ‘பியர் ஆன்ஜனி’ விருது, இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக சினிமாவுக்கு அவர் அளித்த சிறப்பான பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் ‘பியர் ஆன்ஜனி’ விருது பெறும் முதல் ஆசிய ஒளிப்பதிவாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

 

The post கேன்ஸ் திரைப்பட விழா விருதுகளை குவித்த இந்திய திரையுலகம் appeared first on Dinakaran.

Tags : Cannes Film Festival ,Cannes ,Oscars ,Cannes, France ,
× RELATED கேன்ஸ் விழாவில் விருது பெற்ற முதல் இந்திய நடிகை அனசுயா சென்குப்தா..!