×

தான்சானியாவில் இருந்து நெல்லை வந்த இளைஞருக்கு ஒமிக்ரான்? தீவிர சிகிச்சை: தொடர்பில் இருந்த 78 பேருக்கு டெஸ்ட்

நெல்லை: தான்சானியா நாட்டில் இருந்து நெல்லைக்கு வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒமிக்ரான் அறிகுறி இருக்கிறதா என்று பரிசோதனைக்கு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. கொரோனாவின் அடுத்த உருவமான ஒமிக்ரான் வைரஸ் உலகின் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

கடந்த வாரம் கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டில் இருந்து நெல்லை திரும்பிய திருமால்நகர் பகுதியை சேர்ந்த 32 வயது இளைஞருக்கு ஒருவாரம் கழித்து திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சளி பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வெளிநாட்டில் இருந்து வந்த நிலையில், கொரோனா உறுதியானதால் தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் அவரது சளி மாதிரியில் ஒமிக்ரான் தொற்றுக்கான வைரஸ் இருக்கிறதா என்பதை கண்டறிய சென்னைக்கு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே அவருடன் தொடர்பில் இருந்த 78 பேருக்கு மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைவருக்கும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. அவர்களும் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறும் வாலிபர் உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை என மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

வேலூரில் 149 பேர் வீட்டு தனிமை
வேலூர் மாவட்டத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு தினசரி பயணிகள் போக்குவரத்தும் சரக்கு போக்குவரத்தும் அதிகம் என்பதால், வேலூர் மாவட்டத்தில் கூடுதல் கண்காணிப்பு, தடுப்பு பணிகள் மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வசதியாக, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வேலூர் மாவட்டத்துக்கு சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இதுவரை 149 பேர் வந்துள்ளனர். அவர்கள் ஒரு வாரம் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதில் அந்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும், தொடர்ந்து ஒரு வாரம் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Tanzania , Omigron for the young man who came to Nellie from Tanzania? Intensive care: Test for 78 people in contact
× RELATED இந்தியா -தான்சானியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து