புதுடெல்லி: தான்சானியா அதிபர் சாமியா சுலுஹூ ஹசன் 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று குடியரசு தலைவர் மாளிகைக்கு தான்சானியா அதிபர் வருகை புரிந்தார். அவரை அரசு மரியாதையுடன் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து தான்சானிய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா-தான்சானியா இடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள்.
இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே டிஜிட்டல் , கலாசாரம், விளையாட்டு, கடல்சார் தொழில்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வழங்குவது குறித்த 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பேச்சுவார்த்தைக்கு பின் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்தியா-தான்சானியா இடையே இந்திய ரூபாயில் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து செயல்பட்டு வருகிறோம். இந்தியா -தான்சானியா இடையேயான உறவுகளில் இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள். பாதுகாப்பு துறையில் 5 ஆண்டுகால திட்டத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளோம். தீவிரவாதத்துக்கு எதிராக பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post இந்தியா -தான்சானியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து appeared first on Dinakaran.