×

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்: மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை கடந்த ஆகஸ்டு மாதம் 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. 45 வயதும் அதற்கு மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது.

இத்திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களிலுள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாநகராட்சிகளில் (சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி) தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டது. அடுத்ததாக 335 வட்டாரங்களில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சிகளிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம்  முதன்முறையாக உயர் ரத்த அழுத்த நோய் சிகிச்சைக்கான மருந்துகளை பெற்றவர்கள் 16,70,423 பேர், தொடர் சேவைகள் பெற்றவர்கள் 8,03,835 பேர், முதன் முறையாக நீரிழிவு நோய் சிகிச்சைக்கான மருந்துகள் பெற்றவர்கள் 11,41,478 பேர், தொடர் சேவைகளை 5,66,790 பேரும், உயர் ரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் சிகிச்சைக்கான மருந்துகளை முதன் முறையாக 8,37,469 பேரும், தொடர் சேவைகளை 4,37,285 பேரும், நோய் ஆதரவு சிகிச்சை சேவைகளை 1,40,559 பேரும் பெற்றுள்ளனர்.

மேலும் தொடர்சேவைகளை பெற்றவர்கள் 67,771 பேர்,  முதன் முறையாக இயன்முறை சிகிச்சை சேவைகள் பெற்றவர்கள் 2,61,212 பேர், தொடர்சேவைகள் பெற்றவர்கள் 1,38,437 பேர், சிறுநீரக நோய்க்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகள்  முதன் முறையாக பெற்றவர்கள் 851 பேர், தொடர் சேவைகள் பெற்றவர்கள் 420 பேர் என இதுவரை 40 லட்சத்து 51 ஆயிரத்து 992 பேர் பயனடைந்துள்ளனர். மேலும் 20 லட்சத்து 14 ஆயிரத்து 538 நபர்கள் தொடர் சேவைகளை பெற்றுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : More than 40 lakh people have benefited from the People Searching Medical Scheme: Public Welfare Officers Information
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...