×

அடிலெய்டில் பகல்/இரவு டெஸ்ட்: 6வது முறையாக ஆஸி. வெற்றி: இங்கிலாந்து போராட்டம் வீண்

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்டில்,  இங்கிலாந்து கடுமையாகப் போராடியும் 275 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில், 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸி. அணி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட்  பகல்/இரவு போட்டியாக அடிலெய்டில் நடந்தது. டாஸ் வென்று பேட் செய்த ஆஸி. அணி முதல் இன்னினிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.  தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய  இங்கிலாந்து  236 ரன்னுக்கு சுருண்டது. மலான் 80, கேப்டன் ரூட் 62 ரன் எடுத்தனர். ஆஸி தரப்பில்  மிட்செல் ஸ்டார்க் 4,  நாதன் லயன் 3 விக்கெட் அள்ளினர்.

237 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸி. 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. லாபுஷேன்,  ஹெட் தலா 51 ரன் எடுத்தனர்.  இதைத் தொடர்ந்து, 468 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை ஆட ஆரம்பித்தது. அந்த அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் 82 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. இன்னும் 386 ரன் குவித்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி நாளான நேற்று இங்கிலாந்து வீரர்கள் பொறுமையாக விளையாடி விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள போராடினர். அதிக பந்துகளை சந்தித்து கடுமையாகப் போராடிய ஸ்டோக்ஸ் 12 ரன் (77 பந்து), பட்லர் 26 ரன் (207 பந்து),  கிறிஸ் வோக்ஸ் 44 ரன் (97 பந்து), ஆலிவர் ராபின்சன் 8 ரன் (39பந்து), ஆண்டர்சன் 2 ரன் எடுத்து வெளியேற, இங்கிலாந்து 113.1 ஓவரில் 192 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டூவர்ட் பிராடு 9 ரன்னுடன் (31 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸி. பந்துவீச்சில் ஜை ரிச்சர்ட்சன் 19.1 ஓவரில் 9 மெய்டன் உள்பட 42 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.  ஸ்டார்க், லயன் தலா 2, நெசர் 1 விக்கெட் எடுத்தனர். 275 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்க, 3வது டெஸ்ட் ‘பாக்ஸிங் டே’ போட்டியாக  மெல்போர்னில் டிச.26ம் தேதி தொடங்குகிறது. லாபுஷேன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அடிலெய்டில் நடந்த பகல்/இரவு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா 6வது வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடரும் ஆதிக்கம்
* அடிலெய்டில்  நடைபெற்ற பகல்/இரவு டெஸ்ட் போட்டிகளில் தோற்றதே இல்லை என்ற பெருமையை ஆஸி. தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதுவரை   நியூசிலாந்து (2015),  தென் ஆப்ரிக்கா (2016),  இங்கிலாந்து (2017),  பாகிஸ்தான் (2019),  இந்தியா (2020), மீண்டும் இங்கிலாந்து (2021) அணிகளை இங்கு ஆஸி. வீழ்த்தியுள்ளது.
* ஆஸி அணி இதுவரை  9 பகல்/இரவு டெஸ்ட் போட்டிகளையும்  சொந்த மண்ணில்தான் விளையாடியுள்ளது. அடிலெய்டு, பிரிஸ்பேன், பெர்த் நகரங்களில் நடந்த இப்போட்டிகள் அனைத்திலும் வெற்றி வாகையும் சூடியுள்ளது. பகல்/இரவு டெஸ்டில் இதுவரை தோற்காத ஒரே அணி என்ற பெருமையும் ஆஸி.க்கு மட்டுமே சொந்தம்.
* நடப்பு ஆஷஸ் தொடரில் தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்றுள்ள ஆஸி. அணி,  ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  புள்ளிப் பட்டியலில்  இலங்கையுடன் முதல் இடத்தை  பகிர்ந்து கொண்டுள்ளது.

Tags : Adelaide ,Aussie ,England , Test, Aussie. , Success
× RELATED மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்தின் பியூமண்ட் சாதனை