×

வங்கத்தின் வேகத்தில் சரிந்த இந்தியா அஸ்வின் அதிரடியால் நிமிர்ந்தது: கை கொடுத்த ஜடேஜா, ஜெய்ஸ்வால்

சென்னை: இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நேற்று காலை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் தொடங்கியது. முதல் நாாள் இரவு பெய்த மழை காரணமாக நடுக்களம் ஈரமாக இருந்தது. டாஸ் வென்ற நஜ்மல் ஹோசைன் தலைமையிலான வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் என 3 வேகம், அஷ்வின், ஜடஜா என 2 சுழல் ஆல் ரவுண்டர்களுடன் களம் கண்டது.

கூடவே இளம் வீரர்கள் சுப்மன், ஜெய்ஸ்வால் ஆகியோரும் வாய்ப்பு பெற்றனர். விக்கெட் கீப்பர் ரிஷப் 21மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் களத்துக்கு திரும்பினர். கூடவே அனுபவ ஆட்டக்காரர்கள் கோஹ்லி, ராகுல் ஆகியோரும் களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், ரோதித் களம் புகுந்தனர். அடுத்தடுத்த ஓவர்களை வீசிய தஸ்கின் அகமது, ஹசன் முகமது இருவரின் வேகத்தில் இந்திய வீரர்கள் ரன் எடுக்கத் திணறினர். அதிலும் ஹசன் பந்து வீச்சில் ரோகித் 6, சுப்மன் 0, கோஹ்லி 6 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தேநீர் இடைவேளைக்கு முன்னதாக 10ஓவரில் 3விக்கெட்களை பறிகொடுத்து இந்தியா 34ரன் எடுத்திருந்தது. எனவே அடுத்து இணை சேர்ந்த ஜெய்ஸ்வால்-ரிஷப் இருவரும் பொறுமையாக பந்துகளை எதிர் கொண்டனர். அதன் பலனாக 4வது விக்கெட்டுக்கு இந்தியா 62ரன் சேரத்தது குறிப்பிடத்தக்கது. ரிஷப் 39ரன் எடுத்திருந்த போது அவரையும் தனது 4வது விக்கெட்டாக ஹசன் வெளியேற்றினார். விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் ஹாட்ரிக் கேட்ச் பிடித்தார்.

கூடவே பொறுப்புடன் விளையாடி அரைசதம் விளாசியதுடன் ஸ்கோர் 100யை கடக்க உதவிய ஜெய்ஸ்வாலும் 56ரன் எடுத்திருந்த போது ராணா வேகத்தில் பெவிலியன் திரும்பினார். நிதானமாக விளையாடிய ராகுல் 52பந்துக்கு 16ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 42.2ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 166ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது. அதன் பிறகு ஆல்ரவுண்டர்கள் அஸ்வின்-ஜடேஜா இணை சேர, நிலைமை மாறியது. இருவரும் பொறுமையாகவும், பொறுப்புடனும் விளையாட ஸ்கோர் உயர ஆரம்பித்தது.

இடையில் இருவரும் கண்டம் தப்பினர். அஸ்வின் 58பந்துகளில் அரைசதத்தை கடந்தார். அதன்பிறகு அஸ்வின் கூடுதல் வேகம் எடுக்க, ஜடேஜாவும் 73பந்துகளில் அரைசதம் அடித்தார். கூடவே அஸ்வின் தனது 6வது டெஸ்ட் சதத்தையும், சென்னையில் 2வது டெஸ்ட் சதத்தையும் 108பந்துகளில் கடந்தார். அதனால் இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 80ஓவருக்கு 6விக்கெட்களை இழந்து 339 என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது. களத்தில் உள்ள அஸ்வின் 102, ஜடேஜா 86 ரன்னுடன் 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளனர்.

* அதிரடி அஸ்வின்-ஜடேஜா
இருவரும் தலா 10 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி 7வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 195ரன் குவித்துள்ளனர். கூடவே அஸ்வின் 112பந்துகளில 102, ஜடேஜா 117பந்துகளில் 86ரன் எடுத்துள்ளனர். சொந்த மண்ணில் சதம் விளாசிய அஸ்வினை களத்தில் இருந்த ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

The post வங்கத்தின் வேகத்தில் சரிந்த இந்தியா அஸ்வின் அதிரடியால் நிமிர்ந்தது: கை கொடுத்த ஜடேஜா, ஜெய்ஸ்வால் appeared first on Dinakaran.

Tags : India ,Bengal ,Ashwin ,Jadeja ,Jaiswal ,Chennai ,Bangladesh ,MA Chidambaram Stadium ,Chepakkam, Chennai ,Najmal Hossain ,
× RELATED வடக்கு வங்கக்கடலில் குறைந்த...