×

பக்தர்களின்றி நடந்த ஆருத்ரா தரிசன விழா: ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மூலவருக்கு வெந்நீர் அபிஷேகம்

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்களின்றி நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் 3ம் கால அபிஷேகத்தின்போது மூலவருக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று ஆருத்ரா தரிசனம்கோலாகலமாக நடந்தது. அதிகாலை 3 மணிக்கு நான்கு மாட வீதிகளில் கோயில் மணி ஒலித்து, 3.30 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க, 3.45 மணிக்கு திருமஞ்சன சேவையும், அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை, பள்ளியறை பூஜை,  தேவாரம்,  4.30 மணி முதல் கால அபிஷேகம் நடந்தது. இந்த பூஜைகளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 6 மணிக்கு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு லிங்கோத்பவ கால அபிஷேகம் நடந்தது. காலை 7 மணி முதல் 9 மணி வரை கோயில் வளாகத்தில் தங்க கொடி மரம் அருகே உள்ள நடராஜர் சன்னதியில் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது.

இதைத்தொடர்ந்து, நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், உற்சவர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீஞானபிரசுனாம்பிகா சமேத ஸ்ரீகாளஹஸ்திஸ்வரருக்கு(உற்சவர்) சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் சன்னதி எதிரே 10 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. 3ம் கால அபிஷேகத்தின்போது கோயிலில் உள்ள மூலவர் காளஹஸ்திஸ்வரருக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஞானாம்பிகை தாயாருக்கு நண்பகல் 2 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்கு பிரதோஷ கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஹரிகட்லா உற்சவம் நடந்தது. இந்த அனைத்து நிகழ்ச்சிகளும் கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி நடந்தது.

Tags : Arudra Darshan ceremony ,Moolavar ,Srikalahasti , Srikalahasti Temple
× RELATED பொற்றாளம் வழங்கிய தாளபுரீஸ்வரர்