×

ரேங்க் பட்டியலில் நீடிக்கும் குழப்பங்கள்.. மே 5ல் நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!

டெல்லி: அண்மையில் வெளியிட்டப்பட்டுள்ள நீட் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேசிய அளவிலான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்தது. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்-இளநிலை 2024) முடிவுகளை ஜூன் 4ம் தேதி வெளியிட்டது. அதில், தமிழகத்தைச் சோ்ந்த 8 மாணவா்கள் உள்பட நாடு முழுவதும் 67 போ் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இந்த நிலையில், நீட் நுழைவு தேர்வில் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் 6 பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளதால் சக மாணவர்கள் சந்தேகிக்கின்றனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் இருந்து மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பதும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும் இரண்டாமிடம், மூன்றாமிடங்களை பிடித்த மாணவர்களுக்கு 718, 719 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாலும் குழப்பம் நிலவுகிறது. நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தால் நெகட்டிவ் மதிப்பெண்கள் உள்பட 5 மதிப்பெண்கள் கழித்து 715 மதிப்பெண்கள் தான் கிடைக்கும். இது குறித்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ள தேசிய தேர்வு முகமை, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாலேயே மாணவர்கள் 719 மதிப்பெண்கள் பெற்றதாக விளக்கம் அளித்தது. இந்த நிலையில் நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவர்கள், கோழிக்கோடு நீட் பயிற்சி மையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் கருணை மதிப்பெண்களை நீக்கி புதிய தேர்வு முடிவுப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post ரேங்க் பட்டியலில் நீடிக்கும் குழப்பங்கள்.. மே 5ல் நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,National Selection Agency ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு; கவுன்சிலிங்...