×

பிரதமர் மோடி மீது ராகுல் தாக்கு இந்துத்துவவாதிகள் கோட்சேவை போன்றவர்கள்

அமேதி: உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதி நேரு குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. இங்கு கடந்த 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். இந்நிலையில், தோல்விக்குப் பிறகு 2வது முறையாக அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி நேற்று பயணம் மேற்கொண்டார். அங்கு, பாஜ அரசின் தவறான கொள்கைகளால் விலைவாசி உயர்ந்துள்ளதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. இதில், ராகுல், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றனர். பாதயாத்திரையின் பல இடங்களில் மக்கள் திரளாக குவிந்து, ராகுல், பிரியங்காவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜகதிஷ்பூர் பகுதியில் பொதுக்கூட்ட பேரணியில் ராகுல் பேசியதாவது:
2004ம் ஆண்டு நான் அரசியலுக்கு வந்ததும், முதல் தேர்தலை அமேதி தொகுதியில் சந்தித்தேன். அமேதி மக்கள் எனக்கு நிறைய அரசியல் கற்றுத் தந்துள்ளனர். பிரதமர் மோடி அரசின் தவறான கொள்கைகளால் இன்று நடுத்தர மக்களும், ஏழைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி காரணமாக சிறு, குறு தொழில்கள் ஒழிந்து, வேலைவாய்ப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டில் இந்து மதம் பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஒருபக்கம் உண்மையின் பாதையில் செல்லும் இந்துக்கள், மறுபுறம் வெறுப்பை பரப்பும் இந்துத்துவவாதிகள். அவர்கள் அதிகாரத்தை கைப்பற்ற எதையும் செய்யத் துணிந்தவர்கள். மகாத்மா காந்தி ஒரு இந்து, அநீதிக்கு எதிராக போராடினார். இந்துத்துவவாதிகள் நாதுராம் கோட்சே போன்றவர்கள்.

பிரதமர் மோடி தன்னை இந்து என கூறிக் கொள்கிறார். கங்கையில் இந்துக்கள் ஏராளமானவர்களுடன் கூட்டம் கூட்டமாக குளிப்பார்கள். ஆனால், இந்துத்துவவாதிகள் தன்னந்தனியாக கங்கையில் குளிக்கிறார்கள். (சமீபத்தில் வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் வளாக திறப்பு விழாவில் பிரதமர் மோடி தனியாக கங்கையில் குளித்தார்). இவ்வாறு ராகுல் பேசினார்.

மாறாத அமேதி
ராகுல் பேசுகையில், ‘‘அமேதியின் தெருக்கள் ஒவ்வொன்றும் இன்றும் அப்படியே இருக்கின்றன. இங்குள்ள மக்களின் கண்களில், அரசின் மீதான மனக்கசப்பை மட்டுமே பார்க்க முடிகிறது. அவர்களின் இதயங்களில், முன்பைப் போலவே இப்போதும் எங்களுக்கு இடம் உள்ளது. அநீதிக்கு எதிராக நாங்கள் இன்றும் ஒன்றுபட்டுள்ளோம்,’’ என்றார்.



Tags : Rahul ,Modi ,Hindutva , Prime Minister Modi, Rahul, Hindutva
× RELATED என்னுடன் விவாதம் நடத்த பிரதமர் மோடி வர மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்