×

பாஜக அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டதில் ரூ.25,236 கோடி நஷ்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு

சென்னை: பாஜக அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டதில் ரூ.25,236 கோடி நஷ்டம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டை கொளுத்திய அறிவாளியின் புது அவதாரம் தான் “நரேந்திர மோடி”. இந்திய பொருளாதாரத்தின் இரத்த ஓட்டம் எனப்படுவது ரொக்கப்பணம். இந்தியாவின் 86.9% ரொக்கப்பணம் நவம்பர் 8, 2016 அன்று இந்தியாவில் 3 நோக்கங்களுக்காக மதிப்பிழப்பு செய்யப்பட்டது.

1. புழக்கத்தில் இருந்த போலி ரூபாய் நோட்டுகளை ஒழிப்பது.
2. கணக்கில் வராத கருப்புப்பணத்தை ஒழிப்பது.
3. போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பது. [Gazette notification S.O. 3407 (E) dated November 08, 2016].

வெகுசிலரிடம் மட்டுமே இருந்த கருப்பு பணத்தை கண்டறிந்து மீட்டெடுப்பதையும், இந்தியாவில் உள்ள 487 விமான நிலையம் மற்றும் 229 துறைமுகங்கள் வழியாக வரும் போதைப்பொருட்களை தடுப்பதையும், போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதையும் விட்டுவிட்டு, இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களையும் சந்தேகப்பட்டு பணமதிப்பிழப்பு என்னும் பேயை ஏவிவிட்டார் பிரதமர் மோடி. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட இந்துக்கள் மரணமடைந்தனர் – 15 கோடி இந்து தினக்கூலி பணியாளர்களின் வாழ்வாதாரம் பல வாரங்கள் முடக்கப்பட்டது.

லட்சக்கணக்கான இந்துக்களின் தொழில்கள் வீழ்ச்சியடைந்தன – பல லட்சம் இந்துக்கள் உணவு இன்றி தவித்தனர் – 50 லட்சம் இந்து இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டது – கோடிக்கணக்கான இந்துக்கள் பாதிக்கப்பட்டனர் – இந்துக்களை ஏமாற்ற 50 நாளில் தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக நாடகமாடினார். இறுதியில் இந்திய பொருளாதாரத்தில் 2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியில் 2 முறை இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

2016-ல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. 2023-ல் 2000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. இவ்விரண்டு நிகழ்வுகளின் மூலம் இந்தியாவிற்கு ஏற்பட்ட நேரடி நட்டம் ரூ2,52,36,00,00,000 [இருபத்தைய்யாயிரத்து, இருநூற்று முப்பத்தி ஆறு கோடி]. அது எப்படி:

பணமதிப்பிழப்பு : 1
நவம்பர் 8, 2016 அன்று இந்தியாவில் புழக்கத்தில் இருந்த மொத்த ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் மதிப்பு ரூ.17.7 லட்சம் கோடி. இதில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ரூ.15.41 லட்சம் கோடி. இது ஒட்டுமொத்த கரன்சியில் 86.9% ஆகும். மீதமுள்ள 100 ரூபாய் மற்றும் இதர ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் மதிப்பு 2.33 லட்சம் கோடி.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அரசால் அறிவிக்கப்படும் முன்னரே, 2016 நவம்பர் 6-ம் தேதியன்று பஞ்சாப் மாநில பாஜக நிர்வாகி சஞ்சீவ் கம்போஜ் புதிய 2000 ரூபாய் நோட்டின் படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். பின்பு 2016, நவம்பர் 08, இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக அறிவித்தார். அப்படி மதிப்பிழப்பு செய்யப்பட்ட மொத்த தொகை – ரூ.15.41 லட்சம் கோடி.

மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின் வங்கிகளுக்கு திரும்பிய 500, 1000 ரூபாய் நோட்டுகள் – ரூ.15.31 லட்சம் கோடி [99.3%]. திரும்பி வராத நோட்டுகள் – ரூ.10,720 கோடி. ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முன்னெடுக்கும் போது, கிட்டத்தட்ட 20% தொகை, அதாவது 3 லட்சம் கோடி பணம் இந்திய மக்களிடம் கருப்புப்பணமாக இருப்பதாக மோடி அரசு சந்தேகித்தது. இதனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் 3 லட்சம் கோடி தொகை வங்கிகளுக்கு திரும்பாது எனவும், அதன் மூலம் 3 லட்சம் கோடி கருப்பு பணம் ஒழிக்கப்படும் எனவும் தப்புக்கணக்கு போட்டு வைத்திருந்தது மோடி அரசு. ஆனால் வெறும் 0.7% பணம் மட்டுமே திரும்ப வரவில்லை. இது மோடி அரசின் மிகப்பெரும் தோல்வி மட்டுமல்லாமல் மோடி அரசின் சந்தேகத்தினால் மக்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டனர்.

மேலும், 2012-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி தரவுகளின்படி ஒரு 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு ரூ2.50. ஒரு 1000 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு ரூ.3.17. மதிப்பிழப்பு செய்யப்பட நவம்பர் 8, 2016 அன்று இந்தியாவில் 1650 கோடி எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகளும், 670 கோடி எண்ணிக்கையிலான 1000 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அதாவது:
-> 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க : ரூ2.5 வீதம் X 1650 கோடி நோட்டுகள் = ரூ 4125 கோடி
-> 1000 ரூபாய் நோட்டு அச்சடிக்க : ரூ3.17 வீதம் X 670 கோடி நோட்டுகள் = ரூ 2123 கோடி

2013-14-ல் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ரூ11,300 கோடி செலவிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வாங்கி தரவுகள் தெரிவிக்கிறது.
2014-15 நிதியாண்டில் மட்டும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ரூ2,770 கோடி செலவிடப்பட்டுள்ளது.
2015-16 நிதியாண்டில் 429.1 கோடி 500 ரூபாய் நோட்டுகள், 97.7 கோடி 1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
2016-17 நிதியாண்டில் 201.3 கோடி 500 ரூபாய் நோட்டுகள், 92.5 கோடி 1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

சாதாரணமாக புதிதாக அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் 7 ஆண்டுகள் வரை பயன்படுத்தப்படும். பணமதிப்பிழப்பால் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டிருந்த காலாவதியாகாத 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களின் அச்சடிப்பு செலவு : ரூ6248 கோடி இழப்பு. இது மிகவும் குறைந்தபட்ச கணக்கீட்டின் அடிப்படையிலான தொகை ஆகும்.

பணமதிப்பிழப்பு நேரத்தில் மக்கள் பணம் இன்றி சாப்பாட்டிற்காக திண்டாடுகையில், சுரங்க ஊழல் மன்னன் கர்நாடக பாஜக தலைவர் ஜனார்த்தனன் ரெட்டி 450 கோடி செலவில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இதே போல பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தனது மகளின் திருமணத்திற்கு பல்லாயிரம் கோடி செலவழித்தார். குறிப்பாக வி.ஐ.பி. விருந்தினர்களை அழைத்து வர 50 விமானங்களை பயன்படுத்தினார்.

பணமதிப்பிழப்பு : 2
2016 பணமதிப்பிழப்பிற்கு பின் ரிசர்வ் வங்கி புதிதாக அச்சிட்டு வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டுகளை மே, 20, 2023-ல் அவை செல்லாதவை எனவும், செப்டம்பர் 30, 2023-ற்குள் வங்கிகளில் மாற்றிக்கொள்ளவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

ஒட்டுமொத்தமாக அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ7.4 லட்சம் கோடி. மொத்த நோட்டுகளின் எண்ணிக்கை : 370 கோடி

இந்த நோட்டுகளை அச்சடிக்க, தாள் ஒன்றிற்கு 2016-17 -ல் ரூ3.54 வீதமும், 2017-18-ல் ரூ4.18 வீதமும், 2018-19-ல் ரூ3.53 வீதமும் செலவாகியுள்ளது. பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு 04.12.2023 அன்று பதிலளித்துள்ள மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி 2000 ரூபாய் அச்சடித்து விநியோகிக்க ரூ17,688 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

2016 பணமதிப்பிழப்பின் போது நாடு முழுவதும் காணப்பட்ட 2,06,862 ஏடிஎம்-களில் 2000 ரூபாய் நோட்டுகளை புகுத்தும் வகையில் இயந்திரங்களில் அளவு திருத்தம் செய்யவும், மென்பொருளில் மாற்றம் செய்யவும் வங்கிகள் பலகோடி செலவு செய்தன.

இப்படி 2 பணமதிப்பிழப்பின் போதும் இந்திய மக்களின் வரிப்பணம் பயனற்ற வகையில் ஊதாரித்தனமாக விரயம் செய்யப்பட்டது. 2016 நடவடிக்கையின் போது ரூ.ரூ6248 கோடியும், 2023 நடவடிக்கையின் போது ரூ17,688 கோடியும் பண அச்சடிப்பின் மூலம் மட்டுமே வீணடிக்கப்பட்டது. ஆனால், பணமதிப்பிழப்பால் வங்கிகளுக்கு திரும்பி வராத தொகை 10,720 கோடி மட்டுமே. இது சுண்டக்கா கால்பணம், சுமைக்கூலி முக்கால்பணம் என்பது போன்ற நடவடிக்கை. இந்த நடவடிக்கையால் இந்திய பொருளாதாரத்தின் மீது பல்முனை தாக்குதல் தொடுக்கப்பட்டு பல லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டது.

பணமதிப்பிழப்பின் போது நிர்ணயிக்கப்பட்ட 3 நோக்கங்கள் என்ன ஆனது?

பணமதிப்பிழப்பின் நோக்கம் – 1 – போலி ரூபாய் நோட்டுகளை ஒழிப்பது

போலி நோட்டுகள் விவகாரத்தில், ரிசர்வ் வங்கி தரவுகளின்படி பணமதிப்பிழப்பிற்கு முன் 2015-ல் 15.48 கோடியும், 2016-ல் 15.92 கோடியும் கைப்பற்றப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பிற்கு பின் 2017-ல் 28.10 கோடியும், 2018-ல் 17.95 கோடியும், 2019-ல் 25.39 கோடியும், 2020-ல் 92.17 கோடியும், 2021-ல் 20.39 கோடியும் கைப்பற்றப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பிற்கு முன்னும் பின்னும் போலி கரன்சிகளின் பரவல் சராசரியாக இருந்து கொண்டே தான் இருக்கிறது என்பதையே ரிசர்வ் வங்கி தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பணமதிப்பிழப்பிற்கு பின் போலி நோட்டு விவகாரத்தில் சிக்கிய பாஜகவினர்:
ஜார்க்கண்ட், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக செப்டம்பர் 2020-ல் கைது செய்யப்பட பாஜக எம்எல்ஏ புட்கர் ஹெம்ப்ரோமின் மனைவி மலாயா ஹெம்ப்ரோமுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை.

2023 மே மாதம், அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் பாஜக இளைஞரணி நிர்வாகி போலி ரூபாய் நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்..

கேரள மாநிலம், திருச்சூர் அஞ்சாம்பருத்தி பகுதியில் போலி 2000 ரூபாய் நோட்டுகளை தயாரித்து வந்த பாஜக இளைஞரணி பொறுப்பாளர் ராகேஷ் 2017 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

பணமதிப்பிழப்பின் நோக்கம் – 2 – ஊழல் & கருப்பு பணத்தை தடுப்பது
2011-ல் பாஜக வெளியிட்ட அறிக்கையில் 50,000 கோடி முதல் 1.4 லட்சம் கோடி கறுப்புப்பணம் வெளிநாடுகளில் இருப்பதாகக் குறிப்பிட்டது. 2014 தேர்தல் நேரத்தில் இந்தியர்களின் கருப்புப்பணம் 80 லட்சம் கோடி வெளிநாடுகளில் இருப்பதாகவும், பாஜக ஆட்சிக்கு வந்தால் அதைக் கைப்பற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்ச ரூபாய் வீதம் கொடுக்க முடியும் என்றும் கூறினார் மோடி.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன் 2010-ல் ஸ்விஸ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் இந்தியர்களின் 9295 கோடி ரூபாய் அவ்வங்கியில் இருப்பதாக கூறியது. அதனை ஸ்விஸ் வெளியுறவத்துறை அமைச்சகமும் உறுதி செய்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் ஸ்விஸ் வங்கி 2020-ல் வெளியிட்ட ஆண்டறிக்கையில் இந்தியர்களின் தொகை 20,700 கோடி இருப்பதாகவும், 2021 அறிக்கையில் கடந்த 14 வருடங்களில் இல்லாத அளவிற்கு ரூ30,500 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் முன் 2015-ம் ஆண்டு உலக ஊழல் குறியீட்டு பட்டியலில் இந்தியா 76-வது இடத்தில இருந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், 2022 பட்டியலில், இந்தியா 85 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திர ஊழலில், நட்டத்தில் இயங்கி வந்த நிறுவனங்கள் கோடி கோடியாக பாஜகவிற்கு நன்கொடை வழங்கியிருக்கின்றன. நட்டத்தில் இயங்கும் நிறுவனம் எப்படி கோடி கோடியாக நன்கொடை வழங்க முடியும், அந்த பணம் எங்கிருந்து வந்தது, அது கறுப்புப்பணமா, சீனா, பாகிஸ்தான் போன்ற எதிரி நாடுகளின் தூண்டுதலில் வழங்கப்படும் பணமா என்பதெல்லாம் விடைதெரியாத கேள்விகள்.

வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இமாலய ஊழல் நடைபெற்றுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை துறை 1 கி.மீ. சாலை அமைக்க 250 கோடி செலவிட்டதாக குறிப்பிட்டிருந்தது. இதே துறையின் அமைச்சர் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, தனது மகளின் திருமணத்திற்கு 50 விமானங்கள் வரவழைத்து பல ஆயிரம் கோடி ஆடம்பர செலவு செய்தார்.

பணமதிப்பிழப்பின் நோக்கம் – 3 – போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் வளர்வதை தடுப்பது

தீவிரவாத தாக்குதல்கள் குறித்த தரவுகளை 2000-வது ஆண்டில் இருந்து ஆய்வு செய்தால், 2000-ல் 1910 பேர் உயிரிழந்துள்ளனர், 2001-ல் 2802 பேரும், 2002-ல் 2329 பேரும், 2003-ல் 2321 பேரும் , 2004-ல் 1679 பேரும், 2005-ல் 1750 பேரும், 2006-ல் 1376 பேர் என படிப்படியாக குறைந்து கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் மோடி அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பால் தீவிரவாத செயல்களுக்கு பண விநியோகம் தடைபட்டு தீவிரவாதம் முற்றிலும் தடைபடும் என வாதிட்டனர். ஆனால், பணமதிப்பிழப்பிற்கு பின்பும் தீவிரவாத செயல்கள் ஓயவில்லை என்பதை கீழ்காணும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன:

நவம்பர் 29, 2016 – நக்ரோடா முகாமில் நடைபெற்ற 12 மணி நேர துப்பாக்கி சூட்டில் 7 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தீவிரவாத தாக்குதல்களுக்கு 2016-ம் ஆண்டில் மொத்தம் 492 பேர் உயிரிழந்துள்ளனர்.

மார்ச் 7, 2017 – போபால் – உஜ்ஜயின் ரயிலில் குண்டு வெடிப்பு – 11 பேர் காயம். ஏப்ரல் 24, 2017 – சட்டீஸ்கர் சுக்மாவில் நடைபெற்ற தாக்குதலில் 25 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். தீவிரவாத தாக்குதல்களுக்கு 2017-ம் ஆண்டில் மொத்தம் 443 பேர் உயிரிழந்துள்ளனர்.

மார்ச், 13, 2018 – சட்டீஸ்கர் சுக்மாவில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் 9 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். தீவிரவாத தாக்குதல்களுக்கு 2018-ம் ஆண்டில் மொத்தம் 478 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெப்ரவரி 14, 2019 – புல்வாமா கார் குண்டு வெடிப்பில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 2019-ல் 332 பேரும், 2020-ல் 299 பேரும், 2021-ல் 314 பேரும் தீவிரவாத தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அரசு முன்வைத்த 3 நோக்கங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. கருப்பு பணம் ஒழியவில்லை; ஊழல் ஒழியவில்லை, கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது; தீவிரவாத செயல்கள் வழக்கம் போல நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனால், அரசு பணமதிப்பிழப்பிற்காக செலவிட்ட தொகை, பண அச்சடிப்பு செலவு, மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், ஆகியவற்றின் மூலம் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு பல லட்சம் கோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post பாஜக அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டதில் ரூ.25,236 கோடி நஷ்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு appeared first on Dinakaran.

Tags : BJP government ,Minister Mano Thangaraj ,Chennai ,X site ,Narendra ,Minister Mano Tangaraj ,Dinakaran ,
× RELATED ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி...