×

சூலூரில் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட 3 கோயில்கள் இடித்து அகற்றம்: போலீஸ் குவிப்பு- பதற்றம்

சூலூர்: சூலூர் அருகே புறம்போக்கு இடத்தில் கட்டிய 3 கோயில்களை  வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர். கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டணம் அருகே உள்ள ராமன்குட்டை பகுதியில் வாசுதேவன் கோயில் உள்ளது. நூற்றாண்டு பழமையான இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதன் எதிரில் இருந்த குட்டை புறம்போக்கு இடத்தில் மண்ணைக்  கொட்டி  மேலும் 7 கோயில்கள் கட்டப்பட்டன.இதை எதிர்த்து குட்டையின் அருகிலிருந்த விவசாயிகள் தங்கள் பூமிகளுக்கு செல்லும் வழித்தடத்தை மறித்து அனுமதியின்றி கோயில் கட்டி உள்ளதாகவும், அதை இடித்து வழித்தடம் அமைத்துத் தர வேண்டும் என்றும்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

புறம்போக்கு இடத்தில் கட்டியுள்ள கோயில்களை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், சூலூர் வருவாய் ஆய்வாளர் சிவபாலன்  மற்றும் கிராம கிராம நிர்வாக அலுவலர் அன்னக்கொடி ஆக்கிரமிப்பை அகற்ற போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தனர்.இதையடுத்து, சூலூர் இன்ஸ்பெக்டர் மாதைய்யன் தலைமையில் 20 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர். போலீஸ் பாதுகாப்புடன் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட 7 கோயில்களில் 3 கோயில்கள் மற்றும் கருடகம்பம் ஆகியவை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. கோயில் இடிக்கப்ட்டதைத் தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Sulur , Demolition of 3 temples built in an outlying area in Sulur: Police mobilization- Tension
× RELATED தாமரையை தோற்கடிக்கணும்… மனதில் இருப்பதை கொட்டிய டிடிவி