×

11 மாநிலங்களில் பரவியது சதம் அடித்தது ஒமிக்ரான்: சமூக பரவல் தொடங்கியதா?

புதுடெல்லி: நாடு முழுவதும் 11 மாநிலங்களில் பரவிய ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளது. இதனால், ஒமிக்ரான் தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டதா என்ற பீதி ஏற்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 50 பிறழ்வுகளுடன் கூடிய விரியமிக்க ஒமிக்ரான் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது டெல்டா வைரசை காட்டிலும் மிக வேகமாக பரவக்கூடியது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. இதனால், இந்தியாவில் இம்மாதம் 1ம் தேதி முதல் சர்வதேச விமான நிலையங்களில் கெடுபிடிகள் கடுமையாக்கப்பட்டன. தொற்று பரவிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த, தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருந்தது மரபணு பரிசோதனையில் முதன் முதலில் உறுதியானது. அதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 15ம் தேதி நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் ஒமிக்ரான் பாதித்தோர் எண்ணிக்கை நேற்று 100ஐ தாண்டியது. நேற்று மாலை நிலவரப்படி 11 மாநிலங்களில் 113 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து ஒன்றிய சுகாதார துறை இணை செயலாளர் லாவ்பார்கவா அளித்த பேட்டியில், ‘ஒமிக்ரான் சமூக பரவல் கட்டத்தை எட்டியிருக்கிறதா என்பதை பற்றி இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. எனவே, மக்கள் அவசியமற்ற விமான பயணங்களை தவிர்க்க வேண்டும். புத்தாண்டு போன்ற கொண்டாடங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்,’ என வலியுறுத்தினார்.

மாநிலங்கள்    எண்ணிக்கை
மகாராஷ்டிரா    40
டெல்லி        22
ராஜஸ்தான்    17
கர்நாடகா        8
தெலங்கானா    8
குஜராத்        7
கேரளா        7
ஆந்திரா        1
சண்டிகர்        1
தமிழ்நாடு        1
மேற்கு வங்கம்    1

Tags : Omigron, social diffusion, corona
× RELATED தமிழ்நாட்டில் 5நாட்களுக்கு வெப்ப...