×

மேகதாது, ராசி மணல் அணைகள் விவகாரம்: 3 மாதத்தில் முடிவு எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மேகதாதுவில் அணை கட்டக் கூடாது, ராசி மணலில் கட்ட வேண்டும் என்பது தொடர்பாக மூன்று மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என ஒன்றியம், கர்நாடகா, தமிழகம் ஆகியவைக்கு உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் உயிர் நாடியாக காவிரி ஆறு விளங்குகிறது. இதனை கருத்தில் கொண்டுதான், நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் விதமாக உச்ச நீதிமன்றத்தால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைகப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 9 ஆயிரம் கோடியில் புதிய தடுப்பணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் 2 மாதங்களுக்கு முன் 2 ரிட் மனுக்களை  தாக்கல் செய்தார். அதில், ‘மேகதாவில் அணை கட்டுவதால் பாதிப்பு அதிகம் ஏற்படும். வனவிலங்குக்கும் இது உகந்தது கிடையாது. இதனால், 12 ஏக்கர் நிலம் வீணாவது மட்டுமில்லாமல், ஆறு கிராமங்களும் பாதிப்படையும். குறிப்பாக, மேதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அமைத்த கமிட்டி கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதனால், மேதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது,’ என தெரிவித்தார். மற்றொரு மனுவில், ‘ஒக்கேனலுக்கு மேலே தமிழக எல்லையில் இருக்கும் ராசி மணல் பகுதியில் அணை கட்ட முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் கிடப்பில் உள்ளது. இதற்கும் கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர்களுக்கு ஒன்றிய அரசும் ஒத்துழைப்பு வழங்கி அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறது. இந்த அணையை கட்டினால் கர்நாடகாவுக்கும் 10 டிஎம்சி நீரும், 750 மெகாவாட் மின்சாரமும் கிடைக்கும்,’ என தெரிவித்தார்.

இந்த மனுக்களும் நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர், சி.டி.ரவிக்குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘மேகதாதுவில் அணை கட்டக் கூடாது, அதேப்போல், ராசி மணல் பகுதியில் அணை கட்ட வேண்டும். இவை தொடர்பாக ஒன்றிய அரசும், கர்நாடகா மற்றும் தமிழக அரசுகளும் அடுத்த 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும். இதில் திருப்தியில்லை என்றால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம்,’ என கூறி, வழக்குகளை முடித்து வைத்தனர்.


Tags : Megha Dadu ,Rasi ,Sand Dams ,Supreme Court , Meghadau Dam, Supreme Court, Order
× RELATED மங்களம் பொங்கும் பங்குனி மாதம்!