எந்த நேரத்திலும் கைவிட மாட்டோம் தங்கமணிக்கு ஓபிஎஸ், இபிஎஸ் ஆறுதல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக  முன்பை காட்டிலும் வீறுகொண்டு எழுகிறது என்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் முன்னாள் அமைச்சர் தங்கமணி இல்லங்களில் சோதனை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் போன்ற முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களிலும்,

அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களிலும், அதேபோல் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவருமான  இளங்கோவன் இல்லத்திலும் நடந்த சோதனைகளை தொடர்ந்து, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தற்போது தங்கமணி இல்லத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சோதனையானது அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.

தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நாளை அறிவித்திருக்கிற அதிமுகவின் போர்ப்படை தளபதிகளை பார்த்து அஞ்சுவதன் வெளிப்பாடு தான் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை. எம்ஜிஆர், ஜெயலலிதா பாசறையில் பயின்ற நாங்களும், அதிமுக தொண்டர்களும் இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சிவிடமாட்டாம். இந்த வழக்குகளை சட்டப்படி சந்தித்து வெற்றிவாகை சூடி, புடம்போட்ட தங்கங்களாக, நெருப்பில் பூத்த மலர்களாக, உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையாக, நீரில் மிதக்கும் மேகங்களாக மீண்டு வருவோம்.

அதற்குண்டான மனோ பலத்தை எங்களுடைய இருபெரும் தலைவர்களும், உடல் திண்மையை, மன வலிமையை அதிமுக உடன்பிறப்புகளும் தருவார்கள் என்று சொல்லி, இந்த இயக்கமும், நாங்களும் யாரையும் எந்த நேரத்திலும் கைவிடமாட்டோம். சோதனையில் தோளோடு தோள் நிற்போம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Related Stories: