ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மதுரை மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை: மதுரை மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். ரூ.5 கோடி மதிப்பீட்டில் மதுரை மாவட்ட மக்கள் கட்டிட மற்றும் மனை பிரிவு திட்ட அனுமதி போன்றவைகள் விரைந்து பெறும் வகையில் மதுரை கூடல்புதூரில் 872 ச.மீ பரப்பளவில் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான பிரத்தேக பகுதி, பார்வையாளர்கள் அறை, உதவி இயக்குனர் அறை, நிர்வாக பிரிவுக்கான பிரத்தேக பகுதி, கூட்ட அரங்கு, பதிவு வைப்பறை, மின் தூக்கி, மாற்று திறனாளிகள் வந்து செல்வதற்கு ஏற்ற வசதி மற்றும் இணைய வசதி போன்ற நவீன வசதிகளுடன் கூடிய மதுரை மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலக கட்டிடம் முதல்வரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

மாநிலத்தில் நகர்ப்பகுதிகளில் திட்டமிட்டபடி சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக நகர் ஊரமைப்பு இயக்ககம் உருவாக்கப்பட்டது. முறைப்படுத்தப்பட்ட வளர்ச்சி நகரப் பகுதிகளில் ஏற்படுத்திட மண்டலத் திட்டங்கள், முழுமைத் திட்டங்கள், புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை தயாரித்து செயல்படுத்துவது, மனைப் பிரிவுகள், மனைகள், கட்டடங்கள் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் திட்டங்களில் மாற்றங்கள் செய்தல் போன்ற பணிகளை இவ்வியக்ககம் செய்து வருகிறது.

இத்தகைய முக்கியவத்துவம் வாய்ந்த பணிகளை ஆற்றிவரும் நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டடத்திற்கு சொந்தக் கட்டடம் கட்டும் வகையில், மதுரை மாநகர், கூடல்புதூரில் தரை மற்றும் முதல் தளத்துடன் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இவ்வலுவலகம், இணை மற்றும் உதவி இயக்குநர்கள் அலுவலக அறைகள், பணியாளர்கள் அறைகள், கூட்டரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா, நகர் ஊரமைப்புத்துறை இயக்குநர் எ.சரவணவேல்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: