×

கீரனூர் கூட்டுறவு வங்கி நகை கடன் மோசடியில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட வங்கி அதிகாரி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கூட்டுறவு வங்கியில் 1 கோடி ரூபாய் நகைக்கடன் மோசடியில் ஈடுபட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்ட வங்கி அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தொடக்கக் கூட்டுறவு  வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி உள்ளது. இந்த வங்கியில் நகைக்கடன் வழங்கப்பட்டத்தில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சொந்த மாவட்ட அதிகாரிகளை தவிர்த்து அருகாமை மாவட்டமான தஞ்சாவூர் மண்டல ஆய்வு குழுவினர் மூலம் வங்கியில் நகைக்கடன் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் நகையே இல்லாமால் 1 கோடியே 8 லட்சம் ரூபாய்க்கு கடன் வழங்கியது தெரியவந்தது. இந்த தொகையை வங்கியில் பணியாற்றும் ஊழியர்களே தங்களது உறவினர்கள்  பெயரில் நகையை அடகு வைத்தது போலவும், அதற்கு கடன் வழங்கியது போலவும் கணக்கு காண்பித்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேட்டில் வங்கி செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல், நகை மதிப்பீட்டாளர் கனகவேலு ஆகியோர் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மூவரையும் பணிஇடை நீக்கம் செய்து கூட்டுறவுசங்கங்களின் மண்டல இணை பதிவாளர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.

மேலும், நகை மதிப்பீட்டாளர் கனகவேலு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதுடன் 3 பேர் மீதும் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், வங்கி செயலாளர் நீலகண்டன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.             


Tags : Keeranur , Keeranur, Co-operative Bank, Jewelery loan, Fraud, Suicide
× RELATED கீரனூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது