பிரிகேடியர் லிடருக்கு தலைவர்கள் அஞ்சலி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மூத்த அதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் லிடர் உடல் டெல்லி கன்டோன்ட்மென்ட் மயானத்தில் உள்ள பிரார் சதுக்கத்தில் அஞ்சலிக்காக நேற்று காலை வைக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் மற்றும் முப்படை தளபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள் ஆகியோர் மலர் வளையம் வைத்து பிரிகேடியர் லிடர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பிரிகேடியர் லிடரின் மனைவி கீதா லிடர், 17 வயது மகள் அஸ்னா லிடர் ஆகியோர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து முழு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

கீதா லிடர் கூறுகையில், ‘‘என் கணவர் அனைவராலும் விரும்பப்பட்டவர். அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். அவரை நாம் புன்னகையுடன் வழியனுப்ப வேண்டும். நான் ஒரு வீரரின் மனைவி என்பதில் பெருமை கொள்கிறேன்’’ என்றார் தழுதழுத்த குரலில். அவரது மகள் அஸ்னா கூறுகையில், ‘’17 வருடங்கள் எங்களுடன் என் தந்தை இருந்தார். அந்த நினைவுகளுடன் எஞ்சிய வாழ்க்கையை வாழ்வோம். என் தந்தை தான் என் ஹீரோ, எனது உற்ற நண்பர், என்னை மிகவும் ஊக்கப்படுத்தக் கூடியவர் அவர்தான்’’ என்றார். பிரிகேடியர் லிடர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஜெனரல் பிபின் ராவத்தின் உதவி அதிகாரியாக இருந்தார். முன்னதாக, இவர் ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸின் இரண்டாவது பட்டாலியனுக்கு தலைமை தாங்கினார். மேலும், இவர் மேஜர் ஜெனரல் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்டு இருந்த விரைவில் ஒரு பிரிவின் தலைமை அதிகாரியாக பணியாற்றுவதாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டை நாடுகளின் தளபதிகள் பங்கேற்பு

ஜெனரல் பிபின் ராவத் மறைவுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ தலைமை அதிகாரிகள் இரங்கல் தெரிவித்தனர். மேலும், நேற்று நடந்த பிபின் ராவத்தின் இறுதி சடங்கில் இலங்கையின் ராணுவ தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் தளபதி அட்மிரல் ரவிந்திர சந்திரா விஜிகுணரத்னே (தேசிய ராணுவ கல்லூரியில் சக மாணவராகவும், பிபின் ராவத்தின் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர்), பூடான் ராணுவ துணைத் தளபதி பிரிக் டோர்ஜி ரின்சன், நேபாள ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பால் கிருஷ்ணா கார்கி, வங்கதேச ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் வகார் உஸ் ஜமான் உள்ளிட்ட அண்டை நாடுகளின் ராணுவ தளபதிகள், உயர் அதிகாரிகள் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும் இந்தியாவுக்கான பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் தூதர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

‘வதந்தி பரப்ப வேண்டாம்’

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் என விமானப்படை வலியுறுத்தி உள்ளது. அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில், ‘துயரமான ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரிக்க முப்படை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விசாரணை ஆதாரங்களின் அடிப்படையில் மிக விரைவாக நடத்தி முடிக்கப்படும். அதுவரை, உயிரிழந்த ராணுவ வீரர்களின் கண்ணியத்தை காக்கும் வகையில், வதந்திகள் பரப்புவதை தவிர்க்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விமானப்படை உயர் அதிகாரி ஏர் மார்ஷல் மனவேந்திரா சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: