×

கடமலைக்குண்டு அருகே மழைக்கு ஒழுகும் அரசு பள்ளி: மாணவ-மாணவிகள் அவதி

வருசநாடு: கடமலைக்குண்டு அருகே அரசு பள்ளியின் மேற்கூரை சேதமடைந்து மழைக்கு ஒழுகி வருவதால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 250 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடமலை மயிலை ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பள்ளியின் மேற்கூரை சேதமடைந்துள்ளதால் மழைக்கு ஒழுகி வருகிறது. வகுப்பறைக்குள் மழைநீர் விழுவதால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் நிலவி வருகிறது.

மழை பெய்தாலேயே மாணவர்கள் வீடுகளுக்கு சென்று விடுகின்றனர். மேற்கூரை சேதமடைந்துள்ளதால் மழைக்கு எந்தநேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் உள்ளனர். மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து மேலப்பட்டி கிராம கமிட்டி நிர்வாகி ராஜேஷ்கண்ணன் கூறுகையில், ‘இந்த பள்ளி 1982 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

அதன்பிறகு பள்ளியில் மராமத்து பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பள்ளி சிதிலமடைந்து மிகவும் பரிதாப நிலையில் உள்ளது. எனவே பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி, பாழடைந்த பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு விரைவில் புதிய கட்டிடம் கட்டி கொடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


Tags : Katamalaikundu , Rainy government school near Katamalaikundu: Students suffer
× RELATED கடமலைக்குண்டு மூலவைகை ஆறு...