×

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு பிரதமர், முதல்வர் அஞ்சலி

* 13 பேரின் உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டது
* முழு ராணுவ மரியாதையுடன் இன்று இறுதி சடங்கு

குன்னூர்: குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பிபின் ராவத் உள்பட பலியான 13 பேர் உடல்களும் தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டன. அங்கு இன்று முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் இந்திய ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இது, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு, கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொள்ள முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் 8 ராணுவ வீரர்கள் டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலம் நேற்று முன்தினம் கோவை சூலூர் விமானப்படை தளம் வந்தனர்.

பின்னர், அங்கிருந்து பிபின் ராவத், அவரது மனைவி உள்பட மொத்தம் 14 பேர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டனர். நண்பகல் 12.15 மணி அளவில் வெலிங்டன் ராணுவ முகாம் அருகே காட்டேரி நஞ்சப்பசத்திரம் என்ற பகுதிக்கு வந்தபோது, பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.  திடீரென ஹெலிகாப்டர் மரங்களின் மீது மோதி வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்து விழுந்தது. இதில், பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா, பிரிகேடியர் லிடர், அரிஜந்தர்சிங், நாயக் குர்ஷேவக்சிங், நாயக் ஜிதேந்திரகுமார், லான்ஸ் நாயக் விவேக்குமார், லான்ஸ் நாயக் சாய் தேஜா, ஹவில்தார் சத்பால், பைலட் பிரிவித்சிங் சவுகான், குல்தீப், பிரதீப், தாஸ் ஆகிய 13 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீக்காயத்துடன் மீட்கப்பட்டார். அவருக்கு குன்னூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல்சிகிச்சைக்காக நேற்று மாலை தனி விமானம் மூலம் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார். ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 13 பேரின் உடல்களும் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குன்னூர் ராணுவ மையத்தில் வைக்கப்பட்டது. பின்னர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. முன்னதாக, ஸ்ரீ நாகேஷ் (மெட்ராஸ் ரெஜிமென்டல்  சென்டர்) மையத்திற்கு அலங்கரித்த வாகனங்களில் உடல்கள் கொண்டு வரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட  13 பேரின் உடலுக்கும் தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் முதன்முதலாக மலர்வளையம் வைத்தும், மலர் தூவியும் வீரவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து, ராணுவ உயர் அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு,  மு.பெ.சாமிநாதன், ராமச்சந்திரன் தமிழக  தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரும் மலர் வளையம்  வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அஞ்சலி செலுத்தினார். இதன்பிறகு பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் மதியம் 12 மணியளவில், கோவையில் இருந்து 13 அமரர் ஊர்திகள் வரவழைக்கப்பட்டு, அதில் தனித்தனியாக 13 உடல்களும் ஏற்றப்பட்டன. சுமார் 85 கிமீ தொலைவில் உள்ள கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. குன்னூர் முதல் சூலூர் வரை மக்கள் வழிநெடுக சாலையின் இருபுறமும் திரண்டு நின்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 13 பேரின் உடல்களும் பிற்பகல் 2.55 மணி அளவில் சூலூர் விமானப்படை தளத்துக்கு வந்து சேர்ந்தன. தொடர்ந்து பிற்பகல் 3.30 மணியளவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி 130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் மூலம் 13 பேரின் உடல்களும் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன. டெல்லியில் இன்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு நடக்கிறது.

* கருப்பு துண்டுடன் வந்த முதல்வர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தோளில் துண்டு அணிந்து செல்வதில்லை. இந்நிலையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று வெலிங்டன் ராணுவ மையத்திற்கு சென்றபோது, தோளில் கருப்பு துண்டு அணிந்திருந்தார். தனது துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு துண்டுடன் வந்திருந்தார்.

* கருப்புப்பெட்டி கண்டெடுப்பு
ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருந்த காரணத்தால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. அத்துடன், கருப்பு பெட்டியை தேடி கண்டுபிடிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும், சூலூர் விமானப்படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். நேற்று காலை உடைந்து நொறுங்கி, எரிந்த நிலையில் மரக்கட்டைகளுக்கு நடுவில் இருந்து கருப்பு பெட்டியை மீட்டனர். இதை ஆய்வுக்காக சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு சென்றனர். கடைசி நிமிடத்தில் பைலட்டுடன் நடந்த உரையாடல் இதில் பதிவாகியிருக்கும். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என ராணுவ அதிகாரிகள் கூறினர். மேலும், உடைந்து நொறுங்கிய ஹெலிகாப்டரின் பாகங்களையும் ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர்.

* பாதுகாப்புக்கு சென்ற போலீசார் விபத்தில் சிக்கினர்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து, பாதுகாப்பு பணிக்காக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் போன்ற பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட போலீசார் குன்னூர் வரவழைக்கப்பட்டனர். நேற்று 13 உடல்களும் தனித்தனி ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது, போலீசாரும் பாதுகாப்புக்காக சென்றனர். மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், பர்லியார் அருகே சென்ற திருப்பூர் அதிரடிப்படையினரின் வேன் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது. இதில், பயணித்த சில போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

* தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்
பர்லியார் பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், ‘‘குன்னூர் ராணுவ மையத்திற்கு அடிக்கடி ஹெலிகாப்டர்கள் வந்து, செல்வதை நாங்கள் காண்போம். இவை, பர்லியார் மலை மீது அதிக உயரத்தில் பறந்து செல்லும். ஆனால், நேற்று முன்தினம் மிகவும் தாழ்வாக ஹெலிகாப்டர் பறந்தது. இதை பார்த்து நாங்கள் ஆச்சரியம் அடைந்தோம். அடுத்த சில நிமிடங்களிலேயே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளிவந்தது. இது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது’’ என்றனர்.

* முதல்வர் சென்னை திரும்பினார்
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் பலியான தகவல் கிடைத்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். இங்கிருந்து, காரில் குன்னூர் புறப்பட்டு சென்றார். அங்குள்ள ராணுவ அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தார். அங்குள்ள வருகை பதிவேட்டில், தனது கண்ணீர் அஞ்சலியை பதிவு செய்தார். இரவில் குன்னூரிலேயே தங்கினார். நேற்று காலை பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கும் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர், குன்னூரில் இருந்து காரில் கோவை வந்து, விமானம் மூலம் நேற்று மதியம் 2 மணிக்கு சென்னை புறப்பட்டு சென்றார்.

* ஏர் மார்ஷல் குழுவினர் 2 மணி நேரம் ஆய்வு
ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான குழுவினர் நேற்று மதியம் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இது, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. அப்போது அந்த பகுதியில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* வருண் சிங் பெங்களூருக்கு மாற்றம்
ஹெலிகாப்டர் விபத்தில், கேப்டன் வருண் சிங் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். அவரது உடலில் 80 சதவீத தீக்காயம் இருந்தது. குன்னூர் ராணுவ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்  நேற்று  ராணுவ விமானம் மூலம் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து கமாண்டோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* பெங்களூரு நிகழ்ச்சிதான் கடைசியா?
கடந்த அக்டோபர் 22ம் தேதி பெங்களூரு எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில், 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற வெற்றியை கொண்டாடும் நோக்கில் ஸ்வார்னிம் விஜய் வர்ஷா ஆப் 1971 வெற்றி விழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து  கொண்டு, முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். இதன் பிறகு அவர் எந்த அரசு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

* போலீஸ் வழக்குப்பதிவு
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம், குன்னூர் காவல் எல்லைக்கு உட்பட்டது. அதன் அடிப்படையில் குன்னூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குன்னூர் வருவாய் ஆய்வாளர் அருள் ரத்னா அளித்த புகாரின்பேரில், அப்பர் குன்னூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

* டெல்லியில் பிரதமர் மோடி அஞ்சலி
ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள், கோவையிலிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் மூலம் நேற்றிரவு 7.40 மணிக்கு டெல்லி பாலம் விமானப்படை தளத்தை வந்தடைந்தன. அங்கு ராணுவ அணிவகுப்புடன் உடல்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டன. இரவு 9 மணி அளவில் பிரதமர் மோடி முதல் நபராக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். பிரதமரைத் தொடர்ந்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். விபத்தில் பலியான ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து பிபின் ராவத்தின் உடல், காமாஜர் மார்க்கில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 11 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அங்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். பிற்பகல் 2 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கும். மாலை 4 மணி அளவில் டெல்லி கன்டோன்மென்ட் மயானத்தில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.

Tags : Chief of Army Staff ,Bipin Rawat , Prime Minister pays tribute to Chief of Army Staff Bipin Rawat, who was killed in a helicopter crash
× RELATED தேச பக்தி பற்றி மோடி எங்களுக்கு பாடம்...