×

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் வசதிக்காக தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலை குறைப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தினை தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழ செய்ய இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   
இதன்படி, 50 ஆண்டுகள் கடந்து தனது சேவையினை வழங்கி வரும் தமிழ்நாடு சிட்கோ வரலாற்றில் முதல் முறையாக, தொழில்மனைகளின் அதிக விலை காரணமாக பல வருடங்களாக ஒதுக்கீடு செய்யப்படாமல் காலி மனைகளை கொண்ட தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பினை  மிகக்கணிசமாக குறைத்துள்ளது.

தொழில்மனைகளின் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு தொழிற்பேட்டைகளில் மனைமதிப்பு தொழில்முனைவோர் எளிதில் வாங்கிடும் அளவில் குறைந்துள்ளது. உதாரணமாக, ஊத்தங்கரை தொழிற்பேட்டையில் ஏக்கர்  ஒன்றிற்கு ரூ.1,19,79,000ல் இருந்து 75% குறைத்து ரூ.30,81,200, கும்பகோணத்தில் ரூ.3,04,92,000ல் இருந்து 73% குறைத்து ரூ.81,89,300 மற்றும் நாகப்பட்டினத்தில் ரூ.2,39,71,500ல் இருந்து சுமார் 65% குறைத்து ரூ.85,35,800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.   

மேலும், தற்போதைய மனைமதிப்பில் இருந்து ஏக்கர் ஒன்றிற்கு கோயம்புத்தூர் மாவட்டம் குறிச்சியில் ரூ.9 கோடியில் இருந்து 4.8 கோடி குறைத்து ரூ.4.2 கோடியாகவும், திருப்பத்தூர் மாவட்டம், விண்ணமங்கலத்தில் ரூ.4.8  கோடியில் இருந்து ரூ.2.8  கோடி குறைத்து ரூ.2 கோடியாகவும், செங்கல்பட்டு மாவட்டம், ஆலத்தூரில் ரூ.6 கோடியில் இருந்து ரூ.2.5 கோடி குறைத்து ரூ.3.5 கோடியாகவும் மற்றும் ஈரோடு தொழிற்பேட்டையில் ரூ.6.4 கோடியில் இருந்து ரூ.2.6 கோடி குறைத்து ரூ.3.8 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைமதிப்பினால் பல வருடங்களாக குறைவான மனைகளே ஒதுக்கீடு செய்யப்பட்டு 400க்கும் மேற்பட்ட காலி தொழில்மனைகளை கொண்ட காரைக்குடி, பிடாநேரி, ராஜபாளையம் தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பு 30% முதல் 54% வரையிலும் மற்றும்  விருதுநகர், அரக்கோணம், பர்கூர் தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பு 40% முதல் 50% வரையிலும் குறைக்கப்பட்டுள்ளதுடன் 19 தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பும் சுமார் 5% முதல் 25% வரை குறைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், 12 தொழிற்பேட்டைகளுக்கு 2016-2017ம் ஆண்டில் இருந்த மனைமதிப்பே நடப்பாண்டிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அம்பத்தூர் மற்றும் திருமழிசை தொழிற்பேட்டைகளுக்கு நடப்பில் உள்ள நடைமுறைகளின்படி ஏக்கர் ஒன்றிற்கு முறையே ரூ.43,86,16,300,  ரூ.13,41,09,300 என நிர்ணயம் செய்யப்பட வேண்டியதற்கு மாறாக  2016-2017ம் ஆண்டின் ரூ.25,07,79,100, ரூ.7,66,77,400 என்ற மனைமதிப்பே 2020-2021ம் ஆண்டிற்க்கான மனைமதிப்பாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் குறைவான விலையில் மனை ஒதுக்கீடு பெற்று தொழில் துவங்க முடியும் என்பதால் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் தொழில் மனைகள் ஒதுக்கீடு பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,SIDCO , Tamil Nadu SIDCO Industrial Estates Reduced Prices for Micro, Small and Medium Entrepreneurs Facility: Government of Tamil Nadu Order
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...