டெக் உலகை ஆளும் இந்தியர்கள் வரிசையில் இடம்பெற்ற பராக் அகர்வால்... ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக நியமனம்!!

வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த ஜாக் டோர்சி பதவி விலகி உள்ள நிலையில், புதிய செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரின் சிஇஓ பதவியில் இருந்து ஜாக் டோர்சி விலகி உள்ளார். 16 ஆண்டுகள் அந்நிறுவனத்தின் துணை தலைவர், நிர்வாக தலைவர், தலைமை செயல் அதிகாரி என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த ஜாக் டோர்சி, தாம் பதவி விலகுவதற்கு இது தான் சரியான நேரம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியரான பராக் அகர்வால், ட்விட்டரில் புதிய செயல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பை ஐஐடியில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் பொறியியல் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தில் சேரும் முன் பராக் அக்ரவால் மைக்ரோசாஃப்ட் ரிசர்ச், யாகூ நிறுவனங்களிலும் முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

அதன் பின்னர் 2013ம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தின் மென் பொறியாளராக நுழைந்த பராக் அகர்வால், 2017ம் ஆண்டு தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். இதில் சிறப்பாக பணியாற்றியதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்தின் நம்பிக்கையை பெற்ற பராக் அகர்வால் தற்போது அதன் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ட்விட்டர் நிறுவனத்தை வழிநடத்த பராக் அகர்வால் தகுதியான நபர் என்று முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி பாராட்டி உள்ளார்.

Related Stories: