×

தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பிய நிலையில் ஆக்கிரமிப்புகளால் கால்வாய்கள் தூர்ந்துபோய் தண்ணீர் நிரம்பாத பென்னாத்தூர் ஏரி-அதிகாரிகள் நடவடிக்கைக்கு விவசாயிகள் கோரிக்கை

அணைக்கட்டு : அணைக்கட்டு அருகே பென்னாத்தூர் ஏரி நீர்வரத்து கால்வாய் தூர்வாரததால் தொடர் மழை பெய்து பல ஏரிகள் நிரம்பிய நிலையிலும் நிரம்பாமல் உள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் தாலுகா, அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி பென்னாத்தூர் பேரூராட்சியில் பென்னாத்தூர்-அமிர்தி செல்லும் சாலையில் 170 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்பினால் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. மேலும் விவசாய கிணறுகளில் தண்ணீர் வற்றாத நிலை ஏற்படும்.

மலை அடிவாரங்களில் இருந்து சோழவரம், புதூர், காட்டுபுத்தூர் வழியாக வரக்கூடிய மழைநீர் மற்றும் கண்ணடிபாளையத்தில் இருந்து வரும் தண்ணீரால் இந்த ஏரி நிரம்பும். இந்நிலையில், பல ஆண்டுகளாக கால்வாய் தூர்வாரப்படாததாலும், தற்போது ஆக்கிரமிப்புகளாலும் ஏரிக்கு தண்ணீர் வராத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பென்னாத்தூர் சுற்றியுள்ள பகுதியில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. ஆனால் பென்னாத்தூர் ஏரி மட்டும் இன்னும் நிரம்பாமல் உள்ளது. ஏரிக்கரைகள் பலமாக இருந்தும், ஏரிக்குள் இருக்கும் ஆக்கிரமிப்புகள் மற்றும் ஏரி கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளாலும், தூர்வாரப்படாமல் உள்ளதாலும் இந்த நிலை நீடிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.  

மழைநீர் மட்டும் ஏரிக்குள் ஓரளவுக்கு நிறைந்துள்ள நிலையில் அந்த நீரும் தற்போது தேங்காமல் வீணாக வெளியேறி வருகிறது. மேலும், பென்னாத்தூர்-கண்ணடிபாளையம் செல்லும் வழியில் ஏரிக்குள் கொட்டப்பட்டுள்ள பல்வேறு கழிவுகளால் ஏரி முழுவதுமாக மாசடைந்து கால்வாய்கள் காணாமல் போயுள்ளது. ஏரி நீரை நம்பியிருந்த விவசாயிகள் கன மழை பெய்தும், இந்த ஏரி மட்டும் நிரம்பாமல் உள்ளதால் பெரும் வேதனையில் உள்ளனர்.

எனவே சம்மந்தபட்ட வருவாய் துறையினர் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களை மீட்டு தூர்வாரி ஏரிக்கு நீர் வர வழி வகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டுகொள்ளாத பொதுப்பணிதுறை

பென்னாத்தூர் பகுதியில் உள்ள இந்த ஏரி பொது பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுப்பணிதுறை அதிகாரிகள் இந்த ஏரியின் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைத்து தண்ணீர் வர வழிவகை செய்திருந்தால் ஏரி நிரம்பி கோடி போயிருக்கும். விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததன் காரணமாகவே தொடர் மழை பெய்தும் தற்போது ஏரிக்கு தண்ணீர் வராமல் வறண்டு போய் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags : Pennathur Lake , Dam: Due to the dilapidation of the Pennathur Lake drainage canal near the dam, many lakes did not fill up due to continuous rains.
× RELATED சென்னை உள்நாட்டு விமான முனையத்தில்...