×

சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் விஐபி நுழைவாயிலில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கியது: விமானநிலைய அதிகாரிகள் ஆய்வு

மீனம்பாக்கம்: சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் நேற்று மாலை விஐபி பயணிகள் வருகை தரும் நுழைவு பகுதியான 4ம் எண் கேட்டில் உள்ள 7 அடி உயர கண்ணாடி கதவு திடீரென சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது. இதனால் அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் அலறியடித்து ஓடினர். மேலும், பயணிகளிடையே பரபரப்பு நிலவியது. இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.

சென்னை விமானநிலையத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையத்தில் உள்ள கண்ணாடி கதவுகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடர்ச்சியாக ஒன்றன் ஒன்றாக உடைந்து நொறுங்கி விழுவது வாடிக்கையாக நடைபெற்று வந்தது. இதில் சுவர்களின் பதித்துள்ள கண்ணாடிகள், கண்ணாடி கதவுகள், மேற்கூறை பால் சீலிங்குகள், சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கற்கள் என்று 90க்கும் மேற்பட்ட முறை மாறி மாறி விழுந்து நொறுங்கின. எனினும், இவ்விபத்தில் எவ்வித உயிரிழப்போ, படுகாயங்களோ ஏற்படாமல், ஒருசிலர் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதைத் தொடர்ந்து, இவ்விபத்துகளை தடுப்பது குறித்து சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக அமைந்தது. இதனால், சென்னை விமான நிலையம் என்றாலே, கண்ணாடி உடைந்து நொறுங்கும் பகுதிதானே எனக் கேட்கக்கூடிய விதத்தில் அமைந்துவிட்டது. பின்னர், கடந்த ஓராண்டாக சென்னை விமானநிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி விழுவது அப்படியே நின்று அமைதி காத்ததால் அனைவரும் பெருமூச்சு விட்டனர்.

இந்நிலையில், நேற்று மாலை சென்னை உள்நாட்டு விமான முனையத்தின் டெர்மினல் 1 வருகை பகுதியில், 4ம் கேட்டில் உள்ள சுமார் 7 அடி உயரமுள்ள கண்ணாடி கதவு திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது. எனினும், அதன் கண்ணாடிகள் உறுதியாக இருந்ததால், கீழே சிதறி விழாமல், அப்படியே நொறுங்கி கதவிலேயே ஒட்டிக்கொண்டிருந்தது. அதன் சத்தத்தை கேட்டதும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அலறியடித்து ஓடினர். நல்வாய்ப்பாக, அந்த 4வது கேட் பயணிகள், ஊழியர்கள் யாரும் பயன்படுத்தாமல் மூடியே இருந்தது. வெளிமாநில ஆளுநர்கள், வெளிநாட்டு தூதர்கள் உள்பட பல்வேறு முக்கிய விஐபிக்கள் செல்லும்போது மட்டும் 4ம் எண் கேட் திறக்கப்படும்.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அதுபோன்ற சிறப்பு அனுமதி யாருக்கும் வழங்கப்படவில்லை. எனவே, அந்த 4வது கேட் மூடியே இருந்தது. இதனால், 4ம் எண் கேட் கதவில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்ததும் விமானநிலைய அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அதோடு, அந்த கதவில் உடைந்து கிடந்த கண்ணாடிகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டு, அங்கு புதிய கண்ணாடிகள் அமைத்துள்ளனர்.

அதே நேரத்தில், பயணிகள் நுழையும் கேட் எண் 2 அல்லது ஏதேனும் ஒரு வழியில் இதுபோன்று கண்ணாடி கதவுகள் உடைந்து நொறுங்கியிருந்தால், பயணிகள் மற்றும் விமானநிலைய ஊழியர்கள் உள்பட பலர் படுகாயம் அடைந்திருப்பர் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கோடை வெப்பத்தில் கண்ணாடி மெல்ட் ஆகி உடைந்திருக்கலாம். அல்லது, தற்போது சென்னை விமான நிலையத்தின் 2வது ஃபேஸ் கட்டுமான பணிகள் நடப்பதால், அதன் கம்ப்ரசர்கள் மற்றும் இயந்திரங்கள் இயக்கும்போது ஏற்படும் அதிர்வுகளால் கண்ணாடி கதவுகள் உடைந்து நொறுங்கியிருக்கலாம் என்று விமானநிலைய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

எனினும், சென்னை விமானநிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கண்ணாடி கதவுகளை நிபுணர்கள் குழு முழுமையாக ஆய்வு செய்து, அங்கு உறுதியின்றி காணப்படும் பழைய கண்ணாடிகளை உடனடியாக அகற்றி, புதிதாக மாற்ற வேண்டும் என்று விமானநிலைய ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர். அதுபோல் மாற்றவில்லை என்றால், சென்னை விமானநிலையத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையத்தில் மீண்டும் கண்ணாடிகள் உடைந்து நொறுங்குவது தொடர்ச்சியாக நடைபெறத் துவங்கும். இதனால் சென்னை விமானநிலையத்துக்கு வரும் பயணிகளிடையே பரபரப்பும் அச்சமும் நிலவி வருகிறது.

The post சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் விஐபி நுழைவாயிலில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கியது: விமானநிலைய அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chennai Domestic Airport ,Gate 4 ,
× RELATED சென்னையில் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு