×

இனி தண்ணீர் பஞ்சம் இருக்காது!: ராசிபுரம் அருகே 16 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைந்த ஏரி...கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபடும் கிராமமக்கள்..!!

நாமக்கல்: ராசிபுரம் அருகே 16 ஆண்டுகளுக்கு பின்னர் தட்டாங்குட்டை ஏரி நிறைந்து கடைமடை வரை நீர் பாய்வதால் பொதுமக்களும், விவசாயிகளும் கிடா வெட்டி வழிபட்டனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே சந்திரசேகரபுரம் பஞ்சாயத்தில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் தட்டாங்குட்டை ஏரி அமைந்துள்ளது. ராசிபுரத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 16 வருடங்களுக்கு பின்பு இந்த ஏரி நிரம்பி கடைமடை பகுதியில் நீர் வழிந்தோடுகிறது.

இதனால் உற்சாகமடைந்த சந்திரசேகரபுரம் பஞ்சாயத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், இதனை வரவேற்கும் விதமாக கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். இதுபோல் தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் அரூர் பெரிய ஏரி அமைந்துள்ளது. 165 ஏக்கர் பரப்பளவு கொண்ட இதன் கரையின் நீளம் 1,100 மீட்டராகும். கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பிய நிலையில், அரூர் பெரிய ஏரியும் நிரம்பி வழிகிறது.

இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரி நீர் வெளியேறி கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தன்னார்வலர்கள் ஏரியில் பூ தூவி வரவேற்றனர். இதனிடையே அரூர் ஏரி நிரம்பியதால் அரூர் நகருக்கு குடிநீர் பிரச்சனையோ, அரூரை சுற்றி நடக்கும் கிராமங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் பஞ்சமோ 5 ஆண்டுகளுக்கு வராது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர் மழையால் ஏரிகள், கண்மாய், குளம், குட்டைகள் நிரம்பி வருவது கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Tags : Rasipura , Rasipuram, Lake, Kida, Village Worship
× RELATED பூசாரியிடம் சாட்டையடி வாங்கிய பக்தர்கள்