×

கோயம்பேடு தக்காளி சந்தை மைதானத்தை திறந்தால் ஒரு கிலோ தக்காளி 40க்கு வழங்க தயார்: ஐகோர்ட்டில் வியாபாரிகள் சங்கம் முறையீடு

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் மூடப்பட்டுள்ள திறந்தவெளி தக்காளி சந்தை மைதானத்தை  வியாபாரிகளுக்கு திறந்துவிட்டால் ஒரு கிலோ தக்காளியை 40க்கு விற்க தயார்  என்று உயர் நீதிமன்றத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் முறையிடப்பட்டது. தமிழகத்தில் சமீப நாட்களாக தக்காளி விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உள்ளது.  ஒரு கிலோ தக்காளி 140 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தக்காளி இல்லாமலேயே இல்லத்தரசிகள் கடந்த சில நாட்களாக சமையல் செய்து வருகின்றனர். தக்காளி சட்னி, தக்காளி தொக்கு, தக்காளி சாதம்  எல்லாம் பல வீடுகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை  உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில், வக்கீல் சிவா ஆஜராகி நேற்று ஒரு  முறையீடு செய்தார்.

அப்போது அவர், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மே  5ம் தேதி கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. பின்னர் இந்த மார்க்கெட் அதே ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் 86 சென்ட் நிலப்பரப்பில் தக்காளி கிரவுண்ட் என்ற  மைதானம் உள்ளது. இங்கு தான் தக்காளி ஏற்றி வரும் லாரிகள் நிறுத்தப்பட்டு  சரக்குகள் இறக்கப்படும். கோயம்பேடு மார்க்கெட்டை அரசு திறந்தாலும் இந்த  மைதானத்தை திறக்கவில்லை. இந்த மைதானத்திற்குள் தக்காளி ஏற்றி வரப்பட்ட  பதினொரு லாரிகள் முன்பு நிறுத்தப்பட்டபோது அதிகாரிகள் மைதான நுழைவாயிலை பூட்டி விட்டனர்.  இதனால் தக்காளிகள் அழுகிய நிலையில் பல நாட்களுக்குப் பின்னர்,  உயர் நீதிமன்ற உத்தரவின்படி லாரிகள் வெளியில் எடுக்கப்பட்டன. இதனால்  வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள் கோயம்பேடு  மார்க்கெட்டுக்கு வருவதில்லை. இதன் காரணமாக தக்காளி விலை தமிழகத்தில்  கடுமையாக உயர்ந்துள்ளது.

தற்போது இந்த மைதானத்தை திறந்தால் ஜெய்ப்பூர்,  உதய்பூர், நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகம் வழியாக  தக்காளி லாரிகள் இங்கு கொண்டு வந்து, மைதானத்தில் நிறுத்தி சரக்குகளை இறக்க முடியும்.  இதன் மூலம் தக்காளி விலையை அதிரடியாக குறைக்க முடியும். கிலோ 40 முதல் 50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து தமிழக அரசுக்கு உதவ  எங்கள் சங்கம் தயாராக உள்ளது என்றார். இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி,  இந்த வழக்கை நாளை (இன்று) விசாரிக்கிறேன் என்று கூறி பட்டியலில் பதிவிட ஐகோர்ட் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

Tags : Coimbatore Tomato Market ,Traders Association ,iCourt , koyambedu , Tomato Market, Traders Association, Appeal
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...