சென்னை மேயர் தேர்தல் மறைமுகமாக நடத்தப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் தேர்தல் மறைமுகமாக நடத்தப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தென்சென்னை பகுதியில் போட்டியிடும் திமுகவினர் அக்கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்குகின்றனர். மாவட்ட செயலாளரும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை 5 எம்எல்ஏகள் தொகுதிகளில் 56 வார்டுகள் உள்ளன. இதில் பொது, பெண்கள், எஸ்.சி உள்ளிட்ட வார்டுகள் என தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த அதிமுக அரசு 5 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்தியது.

2021ல் திமுக தலைமையிலான அரசு அமைந்ததும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, திமுக வரலாற்று வெற்றியை பெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த சம்பந்தப்பட்ட துறைக்கு முதலமைச்சர் ஏற்கனவே அறிவுறுத்தினார். நேற்று முன்தினம் முதல் திமுகவில் விருப்ப மனு பெறப்படுகிறது. 5 எம்எல்ஏகள் தொகுதிகளில் உள்ள 56 வார்டுகளுக்கு  விருப்ப மனு பெறப்படுகிறது. இதுவரை 600க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனுவை வாங்கியுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறிய மாற்றம் செய்தால் நீதிமன்றம் செல்ல வாய்ப்பு உள்ளது. ஆகையால் காலதாமதம் செய்வதை தவிர்த்து 2019ல் அதிமுக வரையறையின் படி சென்னை மாநகராட்சி மேயர் தேர்தல் மறைமுகமாக நடத்தப்படும்.

Related Stories: