சென்னை விமான நிலையத்தில் 2,187 கார்கள் நிறுத்தக்கூடிய வசதியுடன் 6 தளங்களுடன் மல்டி லெவல் பார்க்கிங்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கார்கள் நிறுத்தும் வசதியுடன் மல்டி லெவல் கார் பார்க்கிங் மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவரப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் 3.36 லட்சம் சதுர மீட்டரில், 250 கோடி ரூபாய் செலவில் மல்டி அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடம் மற்றும் வணிக வளாகங்கள், முக்கிய பிரமுகர்களுக்கான ஓய்வறைகள் ஆகியவை கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு துவங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டு சகஜநிலை திரும்பியதும் பார்க்கிங் கட்டுமானப்பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகிறது. தற்போது 95 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டது. மல்டி லெவல் கார் பார்க்கிங் வெகுவிரைவில் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.

இந்த வளாகத்தில், ஒரே நேரத்தில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கார்கள்  நிறுத்த முடியும். இது 6 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி கார் நிறுத்தம். இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: அடுக்குமாடி வாகன நிறுத்தம்  மற்றும் வணிக வளாகத்தில் தியேட்டர், கார் பார்க்கிங், சில்லரை வர்த்தக கடைகள், உணவுக் கூடங்கள் ஆகியவை இதில் இடம் பெறுகின்றன. கட்டிடத்தின் மீது வர்ணம் பூசும் பணிகள் நிறைவடைந்துள்ளன. விமான நிலையத்துக்கும் வணிக வளாகத்துக்கும் இடையேயான இணைப்பு பாலம் அமைக்கும் பணிகள் முடிந்து விட்டன. இறுதிக் கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஒரே நேரத்தில் 2,187 கார்கள் வரை நிறுத்த முடியும். வணிக வளாகம் மற்றும் அடுக்குமாடி வாகன நிறுத்தம் விரைவில் திறக்கப்பட்டு மக்களின் செயல்பாட்டுக்கு வரும். விமான நிலையத்திற்கு வரும் பயணியர், வாகனம் நிறுத்துவதில் எந்த சிரமமும் இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: