மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் வாழ்க்கை திரைப்படமாகிறது: இயக்குனர் தகவல்

பெங்களூரு: கன்னட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் (46), கடந்த அக்டோபர் 29ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது திடீர் மறைவு இந்திய திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது ரசிகர்கள் கதறித் துடித்தனர். தற்போது புனித் ராஜ்குமாரின் நினைவிடத்துக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர்.

மேலும், புனித் ராஜ்குமாரின் கண்கள் 4 பேருக்கு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்பட்டு, அவரது ரசிகர்களில் 6 ஆயிரம் பேருக்கு மேல் கண் தான வங்கிகளில் தங்கள் கண்களை தானம் செய்வதற்காக பதிவு செய்துள்ளனர். பலர் ரத்த தானம் செய்து வருகின்றனர். கன்னடத்தில் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்து வெளியான படம் ‘யுவரத்னா’. இப்படத்தை சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கினார். இந்நிலையில், புனித் ராஜ்குமார் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படம் உருவாக்க முன்வர வேண்டும் என்று ஒரு ரசிகர் சந்தோஷ் ஆனந்த்ராம் டிவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதிலளித்த சந்தோஷ் ஆனந்த்ராம், ‘இந்த யோசனையை திரையில் கொண்டு வருவதற்கு என்னாலான முயற்சிகளை செய்வேன்’ என்று பதிலளித்துள்ளார்.

Related Stories: