×

நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி; ஷார்ட் பிட்ச் பந்தில் சிக்சர் அடிப்பது தான் எனது பலம்: இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

கொல்கத்தா: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே 3வது மற்றும் கடைசி டி.20 போட்டி நேற்று கொல்கத்தாவில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித்சர்மா 31 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 56, இஷான் கிஷன் 29 (21 பந்து), ஸ்ரேயாஸ் அய்யர் 25, வெங்கடேஷ் அய்யர் 20, நாட்அவுட்டாக தீபக் சாஹர் 21(8பந்து), ஹர்சல் பட்டேல் 18 (11பந்து) ரன் எடுத்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் கேப்டன் மிட்செல் சான்ட்னர் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து 17.2 ஓவரில் 111 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.

இதனால் இந்தியா 73 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நியூசிலாந்தின் கப்டில் 51(36பந்து), டிம் சீஃபர்ட் 17, பெர்குசன் 14 ரன் அடிக்க மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். இந்திய பவுலிங்கில் அக்சர் பட்டேல் 3, ஹர்சல் பட்டேல் 2 விக்கெட் வீழ்த்தினர். 3 ஓவரில் 9 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் எடுத்த அக்சர்பட்டேல் ஆட்டநாயகன் விருதும். தொடரில் 159 ரன் எடுத்த ரோகித்சர்மா தொடர் நாயகன் விருதும் பெற்றனர். ஏற்கனவே முதல் 2 போட்டியில் வெற்றிபெற்ற இந்தியா 3-0 என தொடரை கைப்பற்றி  நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

வெற்றிக்கு பின் ரோகித்சர்மா கூறியதாவது: எப்போது பேட்டிங் செய்தாலும் நன்றாக தொடங்குவது முக்கியம். அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். பேட்டிங் குழுவாக ஏதாவது செய்ய திட்டமிட்டு முதலில் பேட் செய்தோம். மிடில் ஓவர்களில் சிறப்பாகச் செய்திருக்கலாம். ஆனால் லோயர் ஆர்டரை முடித்த விதம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஹர்ஷல் 2 போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டார். அஸ்வின், அக்சர், சாஹல் நீண்ட நேரத்திற்கு பின் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டனர். வெங்கடேஷ் தன்னிடம் உள்ள திறமையுடன் ஓவர்களை வீசுவது முன்னோக்கி செல்ல பயனுள்ளதாக இருக்கும்.

ஹர்சல் பட்டேல் ஒரு நல்ல பேட்டர். தீபக் இலங்கை தொடரில் பேட் செய்ததை பார்த்தோம். சாஹலும் பேட்டிங் செய்ய ஆவலுடன் காத்திருந்தார். ஷார்ட் பிட்ச் பந்தை விளையாடுவது எனது பலத்தில் ஒன்றாகும், அதனால் நான் அதை விளையாடி சில சிக்சர்களையும் விளாசி அதிகபட்ச பலனைப் பெற முயற்சிக்கிறேன், என்றார்.


Tags : Hadrick ,New Zealand ,Sixer ,Rogithsarma , Hat-trick victory over New Zealand; Hitting a six on a short pitch is my strength: Interview with Indian captain Rohit Sharma
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.