காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் விரைவாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளனர். காஞ்சிபுரம் பாலாற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் உள்ள வில்லிவலம், வாலாஜாபாத், செவிலிமேடு, பெரும்பாக்கம் உள்ளிட்டகிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சிலர் சுதாரித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர், வயதானவர்கள், சிறுவர்கள் வெள்ளத்தில் சிக்கி மீண்டு வர முடியாமல் தத்தளித்தனர்.
வாலாஜாபாத் பகுதியில் சிக்கியிருந்த மக்களை வட்டாட்சியர் லோகநாதன் ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் நீச்சல் அடித்து சென்று கயிறுகளை பயன்படுத்தி அவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தார். இதே போன்று வில்லிவலம் கிராமத்தில் சிக்கியிருந்தவர்களை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, பேரிடர் மீட்பு குழுவினருடன் படகில் பயணித்து அனைவரையும் பத்திரமாக மீட்டார்.