×

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் 6வது நாளாக ஆய்வு செய்தார்: செங்கை, காஞ்சி மாவட்டத்தில் உணவு, நிவாரண பொருட்களை வழங்கினார்

சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி முதல் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக நேற்று செங்கல்பட்டு மாவட்டம், பள்ளிக்கரணை ரேடியல் ரோடு, நாராயணபுரம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, முதல்வர் செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில், வண்டலூர் வட்டத்திற்குப்பட்ட கிராமங்களில் வசிக்கும் இருளர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 33 குடும்பங்களுக்கு கீழ்க்கோட்டையூர் கிராமத்தில் உள்ள நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூர், அடையாறு ஆறு துவங்கும் இடம் மற்றும் மண்ணிவாக்கம், அடையாறு ஆற்று பாலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள நீர்வரத்தை முதல்வர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.  பின்னர் முடிச்சூர், சி.எஸ்.ஐ. செயின்ட் பால்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம் மற்றும் மருத்துவ முகாமை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடாந்து முடிச்சூர், மதனபுரத்தில் கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இறங்கி நடந்து, வெள்ளநீர் அகற்றிடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  பின்னர், தாம்பரம் பேருந்து நிலையத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்து, தூய்மை பணியாளர்களை சந்தித்து, நலம் விசாரித்து, தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், எஸ்.எஸ்.பாலாஜி, செல்வப்பெருந்தகை, எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத், காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தூய்மைப்பணியாளர்கள் மகிழ்ச்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆதனூர் ஜீரோ பாயிண்ட் பகுதிக்கு செல்லும் வழியில் ரத்தினமங்கலம் பகுதியில் தூய்மைப்பணியாளர்களை சந்தித்த அவர், வாகனத்தில் இருந்து இறங்கி அவர்களது குறையை நேரில் கேட்டறிந்தார். அப்போது, அவரிடம் தூய்மைப்பணியாளர்கள், தங்களது பணிகளை நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர், தாம்பரம் பேருந்து நிலையம் வழியாக வந்த முதல்வர், அங்கிருந்த துய்மைப்பணியாளர்களை பார்த்தவுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்களிடம் சென்று கலந்துரையாடினார்.

அப்போது, ‘கொரோனா பாதிப்பின்போது சிறப்பாக பணிபுரிந்த நீங்கள் அனைவரும் தற்போது மழை வெள்ள பாதிப்பிலும் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகிறீர்கள். உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு புறப்பட்டார். இதுகுறித்து தூய்மைப்பணியாளர்கள் கூறுகையில், ‘முதலமைச்சர் காரில் இருந்து இறங்கி வந்து எங்களை சந்தித்து நன்றி தெரிவித்தது, எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது’ என்று தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

பெண் குழந்தை கோரிக்கை
திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் பகுதியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி தற்காலிக நிவாரண முகாமாக செயல்பட்டு வருகிறது. இந்த முகாமுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது, ஒரு பெண் குழந்தை முதல்வரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தது. அந்த மனுவில், ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தைகள் இல்லாமல் 2 பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் அவர்களின் தொடக்க கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை அரசு இலவசமாக படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. குழந்தையிடம் மனுவை வாங்கி கொண்ட முதல்வர், அந்த குழந்தையின் பெற்றோருடன் செல்பி புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

கடையில் டீ குடித்த முதல்வர்
செங்கை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட  பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யும் வழியில், முதல்வர் மு.க.ஸ்டாலின்  கீழ்கோட்டையூரில் உள்ள தேநீர் கடையில், தேநீர் அருந்தி பொதுமக்களிடம்  கலந்துரையாடினார். அவர்கள் கூறியதை கவனித்து ஆவண செய்வதாக கூறினார். தொடர்ந்து,  ஆய்விற்கு செல்லும் வழியில், கண்டிகையில்  தூய்மை பணியாளர்களை சந்தித்து, நலம் விசாரித்து தேவைப்படும் உதவிகள்  குறித்து கேட்டறிந்தார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai, Kanchi district , Heavy rains, Chief Minister MK Stalin, inspection, Chennai, Kanchi district, food, relief supplies,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...