×

சஞ்சீப் பானர்ஜி மேகாலயாவுக்கு மாற்றம் சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் சஞ்சீப் பானர்ஜி 2021 ஜனவரி 4ம் தேதி தலைமை நீதிபதியாக பதிவி ஏற்றார். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பான பல்வேறு வழக்குகளிலும், கொரோனா நிவாரண நிதி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட வழக்குகளில் தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசுக்கு உத்தரவுகளையும், பரிந்துரைகளையும், ஆலோசனைகளும் வழங்கியுள்ளார். பொதுநல வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல வழக்குகளில் தீர்வு கண்டவர்.

இந்நிலையில், இவரை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அடங்கிய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை நியமனம் செய்யவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த முனீஸ்வர் நாத் பண்டாரி, ராஜஸ்தான்  உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக 2007 ஜூலை 5ம் தேதி பதவியேற்றார். அதன்பிறகு, 2019 மார்ச் 15ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மத்திய தீர்ப்பாய வழக்குகள், சிவில் மற்றும் அரசியலமைப்பு தொடர்புடைய வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர். இந்த நீதிபதிகளின் இடமாற்றம் தொடர்பான பரிந்துரை ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் அனுப்பியுள்ளது. ஜனாநிதிபதி ஒப்புதல் அளித்த பிறகு மத்திய அரசு நீதிபதிகளின் பதவிப் பிரமாணம் தொடர்பான ஆணையை வெளியிடும். இந்த வார இறுதிக்குள் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படாலம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Sanjeeb Banerjee Meghalaya ,Chief Justice ,Chennai ,Supreme Court , Sanjeeb Banerjee, Chennai I-Court, New Chief Justice, Supreme Court Collegium
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...