×

காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் மெட்ரோ ரயில்களை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்: மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் உத்தரவு

சென்னை: புயல் காலங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால், மெட்ரோ ரயில்களின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என கண்காணிப்பு குழுவிற்கு மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்வது குறித்து மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில், மெட்ரோ ரயில்வே நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ், கண்காணிப்பு குழுவினருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதீப் யாதவ் பேசியதாவது: மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான பயணம் செய்ய துரித நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்துள்ளது. பயன்பாட்டில் உள்ள இரு வழித்தடங்களையும் சேர்த்து 21 சுரங்கவழிப்பாதை மற்றும் 18 உயர்நிலைப்பாதைகளில் ரயில் சேவைகள் நடைபெற்று வருகின்றன. வானிலை நிலவரங்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு, அதற்கு ஏற்ப ரயில்களை இயக்க சிறப்பு கண்காணிப்புக் குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல் காலங்களில் வீசும் காற்றின் வேகம் அனிமோமீட்டர் கருவிகள் மூலம் அளக்கப்பட்டு மெட்ரோ ரயிலின் ஓட்டம் பாதிக்கப்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மெட்ரோ ரயில்கள் இயக்க குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அங்கு மின் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்ற தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். புயல் காலங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பின்  மெட்ரோ ரயில்கள் தற்காலிகமாக நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் ஓட்டுநர்கள் மற்றும் நிலைய கட்டுப்பாட்டாளர்கள் உரிய பணிகளையும் கருவி செயல்பாடுகளையும் கண்காணிக்கிறார்களா என கண்காணிப்புக்குழு ஆய்வு செய்ய வேண்டும். மின்னல் தாக்குதலில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் அதிநவீன கருவிகள் முக்கிய துணை நிலையங்களை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.


Tags : Managing Director ,Pradeep Yadav , Metro trains should be suspended due to high wind speeds: Managing Director Pradeep Yadav
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு...