போரூர், செங்குன்றம் அருகே கால்வாயில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

சென்னை: தொடர் மழை காரணமாக புறநகர் பகுதிகளில் உள்ள மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், போரூர் அடுத்த மதனந்தபுரம், மாதா நகர் 6வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் நேற்று, மழைநீரில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்து வந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, இறந்த நபர் யார், தண்ணீரில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில்  விசாரிக்கின்றனர்.

மற்றொரு சம்பவம்: செங்குன்றம் அடுத்த வடகரை காந்தி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (65), கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை புழல் ஏரி  கால்வாயில், உபரிநீர் செல்லும் பகுதிக்கு சென்றார். அப்போது,  எதிர்பாராதவிதமாக, தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானார். தகவலறிந்த புழல் போலீசார் விரைந்து சென்று, சடலத்தை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: