சென்னை: ‘அதிமுக ஆட்சியில் 2015ம் ஆண்டு முன்னறிவிப்பு இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளை சென்னை மக்கள் இன்னும் மறக்கவில்லை’ என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறக்கத்தில் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே பேட்டி அளித்துள்ளார். 2015ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டு ஏற்படுத்திய பாதிப்பை போல் இல்லாமல், இந்த ஏரியை கண்காணித்து சரியான அளவில் மழை நீரை வெளியேற்றுவதற்கு ஒரு உயர்நிலை கண்காணிப்பு குழுவை முதல்வர் ஏற்படுத்தியுள்ளார்.
உங்கள் ஆட்சியில் முன்னறிவிப்பு இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விட்டதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சென்னை மக்கள் மட்டுமல்லாமல், தமிழக மக்கள் முழுவதும் இன்னும் மறக்கவில்லை. அதிமுக ஆட்சியில் மழை மற்றும் புயல் காரணமாக சென்னை மாநகராட்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் 10 நாட்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் பட்ட சிரமங்களை நாடு இன்னும் மறக்கவில்லை. வீடுகளில் குடியிருந்தவர்கள் மேல் மாடியில் உட்கார்ந்து கொண்டு உணவிற்காக ஏங்கியதை நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. இதையெல்லாம் மனதில் கொண்டுதான், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆட்சியில் மக்கள் அமர்த்தினார்கள். 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊராட்சி தேர்தலில் திமுகவிற்கு வெற்றியையும், அதிமுகவிற்கு படுதோல்வியையும் அளித்துள்ளார்கள். எனவே, இனியாவது உதயகுமார் களச்சூழ்நிலையை அறிந்து கொண்டு பேட்டி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.