×

தமிழகத்தின் 36 மாவட்டங்களில் அதிக மழை: 4 லட்சம் மக்களுக்கு எஸ்எம்எஸ்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

* வாட்ஸ் அப்பில் புகார் பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், 9445869848 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.

சென்னை: சென்னையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 36 மாவட்டங்களில் அதிக அளவில் மழை செய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 134.29 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை 1.10.2021 முதல் 7.11.2021 வரை 332.0 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 232.8 மி.மீட்டரை விட 43 சதவீதம் கூடுதல் ஆகும். அரியலூர், கோவை, கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, திருவாரூர், திருச்சி, விழுப்புரம், ஆகிய 12 மாவட்டங்களில் இயல்பை விட 60 சதவீதத்திற்கு மேல் மிக அதிகப்படியான மழை பெய்துள்ளது.சென்னையில் 160 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.  சென்னையில் பாதிப்பிற்குள்ளான 81 நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. எனவே, இந்தப் பகுதிகளில் வசிக்கும் 4.09 லட்சம் நபர்களது தொலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை 9ம் தேதி உருவாகும் என்றும், இது வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடதமிழகத்தின் கடற்கரையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.

மேலும், வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை வங்கக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். கடலோர மாவட்டங்களில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,106 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. மீனவர்களுக்கு 21000 உயர் விஎச்எப் கருவிகளும், 600 செயற்கைகோள் தொலைபேசிகளும், 296 நாவ்டெக்ஸ் மற்றும் நாவிக் உபகரணங்களும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கு ஹெலிபேட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார். இவ்வாறு கூறினார்.

Tags : Tamil Nadu ,Minister ,KKSSR ,Ramachandran , Heavy rains in 36 districts of Tamil Nadu: SMS to 4 lakh people; Information from Minister KKSSR Ramachandran
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...