தீபாவளி கொண்டாட்டம் எதிரொலி: மலைபோல் தேங்கிய பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் மும்முரம்

சென்னை: தீபாவளி கொண்டாட்டம் எதிரொலியாக மலைபோல் தேங்கிய பட்டாசு குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம்-1 முதல் 15 வரை நாள்தோறும் சராசரியாக சுமார் 5100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரமாகிறது. நாள்தோறும் சேகரமாகின்ற குப்பையை அகற்றுவதற்காக  358 கனரக / இலகுரக காம்பாக்டர் மற்றும் டிப்பர் வாகனங்கள் மற்றும் 3725 பேட்டரி மூலம் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனங்கள் அன்றாடம் தூய்மைப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகள்  பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் 03.11.2021 அன்று 5076.53 மெட்ரிக் டன் குப்பை, 559.32 மெட்ரிக் டன்  கட்டிடக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக சேகரிக்கப்பட்டுள்ளது.

இதில் சுமார் 416 மெட்ரிக் டன் குப்பை மறுசுழற்சி மையங்களுக்கும், 145 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் நிலங்களில் நிரப்புவதற்கும் அனுப்பப்பட்டுள்ளன.  மேலும் 04.11.2021 அன்று 4312.40 மெட்ரிக் டன் குப்பை, 499.70 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 454.64 மெட்ரிக் டன் குப்பை மறுசுழற்சி மையங்களுக்கும், 45.06 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் நிலங்களில் நிரப்புவதற்கும் அனுப்பபட்டுள்ளன. மீதமுள்ள குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகள் கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

பட்டாசுக் கழிவுகள்

இந்நிலையில்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் கூடுதலாக சேகரமாகும் பட்டாசு குப்பைகள் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக அந்தந்த மண்டலங்களில் தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  05.11.2021 நண்பகல் 12 மணி வரை 138.21 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் தனியாக  சேகரிக்கப்பட்டு  அப்புறப்படுத்தபட்டுள்ளது.

இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ள பட்டாசு குப்பைகள் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகள் சேகரிப்பு மற்றும் அகற்றும் “தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மன்ட் லிமிடெட்” நிலையத்திற்கு 33 எண்ணிக்கையிலான தனி வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. தொடர்ந்து  இன்றும் (05.11.2021)  பட்டாசு குப்பைகள் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக தனியாக சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரவுநேர தூய்மைப்பணி

சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கவும், பொதுமக்களின் சுகாதாரத்தை பேணிகாக்கவும் திடக்கழிவுகள் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களால் நாள்தோறும் அகற்றப்பட்டு வருகிறது.  மேலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றி திடக்கழிவுகளை அகற்ற  இரவு நேரங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள 304 பேட்டரியால் இயங்கும் வாகனங்கள், 104 மூன்று சக்கர வாகனங்கள், 163 காம்பாக்டர் வாகனங்கள், 53 மெக்கானிக்கல் ஸ்வீப்பர், 21 டிப்பர் லாரிகள் மற்றும் 2,192 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories: