×

850 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 600 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: முதல்வரின் தீவிர நடவடிக்கைகளினால் ஏற்கெனவே 850 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் 4 மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 வீதம் 600 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானப் பணிகள் கடந்த 5 மாதங்களாக மருத்துவக் கல்லூரிக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஒன்றரை மாதங்களாக ஒன்றிய அரசின் ஆய்வுக்குழு வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், ஆய்வுக்குழுவினர் சிறிய, சிறிய குறைபாடுகளை தெரிவித்தனர். அச்சிறிய அளவிலான குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, மருத்துவக் கல்வி இயக்குநரை மூன்று முறை டெல்லிக்கு அனுப்பி தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டே இம்மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டுமென்று முதல்வர் பிரதமரிடம் கடிதத்தின் வாயிலாகவும், நேரிலும் வலியுறுத்தினார். மூன்று முறை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை நானும், மருத்துவதுறையின் செயலாளர் மற்றும் அலுவலர்களோடு சென்று வலியுறுத்தியுள்ளோம்.

தொடர் முயற்சியின் காரணமாக 850 மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 150 மாணவர்கள் வீதம், 450 இடங்களுக்கும், ராமநாதபுரம், நாமக்கல், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 100 இடங்கள் வீதம் 400 இடங்களுக்கும் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நானும், மருத்துவத் துறையின் செயலாளர் மற்றும் துறையின் அலுவலர்களோடு ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சர் சந்தித்து மீதமுள்ள 800 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தப்பட்டது.

ஒன்றிய அரசிடமிருந்து கிருஷ்ணகிரி, அரியலூர், நாகப்பட்டினம், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 150 மாணவர்கள் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 850 மாணவர்கள் சேர்க்கைக்கு ஒப்புதல் இப்போது புதியதாக 600 மாணவர்கள் சேர்க்கைக்கு ஒப்புதல் என்கிற வகையில் 1450 மாணவர்கள் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கோவையில் இருக்கிற மருத்துவக் கல்லூரியில் 150 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். மேலும் 100 மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு சார்பில் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு அதுவும் பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்த ஆண்டே கிடைத்திட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது புதியதாக 11 மருத்துவக் கல்லூரிகளிலும் 1450 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. ஆக தமிழகத்தில் 9,100 பேர் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு சிறப்பான வகையில் உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பயில்வதற்கான வாய்ப்பிருக்கிறது. அதற்கான கட்டமைப்பும் தமிழகத்தில் தான் சிறப்பாக அமைந்துள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வந்தபிறகு 1,450 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,750 மாணவர்களுக்கும் அதோடு சேர்த்து கோவையில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு 100 மாணவர்கள் சேர்க்கைக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 19 மாவட்ட அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு,  ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தலா ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு என்ற வகையில் ரூ.950 கோடி நிதி ஒதுக்குவது குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதுவும் ஒன்றிய அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக் கல்லூரி என்கிற திட்டத்தை தமிழக முன்னாள் முதல்வர்  கலைஞர் 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்டு பல மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள் தேவைப்படுவதால் அதற்கான கோரிக்கை ஒன்றிய அரசிடம் வைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் புதிய வைரஸ் தாக்கம் ஒரு சதவிகிதம் அளவிற்கு இருக்கிறது. கர்நாடகாவில் 7 பேர் புதிய வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் புதிய வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை.  வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வைரஸ்களை பரிசோதனை செய்யும் பரிசோதனை மையம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் வாயிலாக மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களிலிருந்து சாம்பிள்ஸ் எடுத்து பரிசோதனை செய்ததில் 84 சதவிகிதம் டெல்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. மீதமுள்ள 14 சதவிகிதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதில் 13 பேருக்கு மட்டும் டெல்டா ப்ளஸ் வைரஸ் வந்தது. வேறெந்த வைரஸ்சும் தமிழகத்திற்கு வரவில்லை. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Tags : Minister ,Ma. Subramanian , With the approval of 850 medical students, an additional 600 medical students have been approved: Information by Minister Ma Subramanian
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...