×

நடப்பு ஆண்டில் டான்சி நிறுவனம், ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்களை உற்பத்தி, விற்பனை செய்ய இலக்கு: அமைச்சர் அன்பரசன் தகவல்

சென்னை: சென்னை கிண்டியில் இன்று  ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம் (டான்சி) தலைமை அலுவலக குழு கூட்ட அரங்கில் 10 மற்றும் 12 ம் வகுப்பில்  அதிக மதிப்பெண்கள் பெற்ற டான்சி ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு விருது / ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

டான்சி ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 10 மற்றும் 12 ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடம் பிடிக்கும்  மாணவ/மாணவிகளுக்கு ரூ.10,000 , ரூ.7500, ரூ.6000 முறையே ஊக்கத் தொகையும்  , 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடம் பிடிக்கும்  மாணவ/மாணவிகளுக்கு ரூ.7500 , ரூ.5000, ரூ.6000  முறையே ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் 2015 -16 கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த 8 மாணவ /மாணவிகளுக்கு ரூ.58,000/- ஊக்கத்தொகையும் , 2016 -17 கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த 6 மாணவ /மாணவிகளுக்கு ரூ39,000/- .ஊக்கத்தொகையும்  2017 -18 கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த  5  மாணவ /மாணவிகளுக்கு ரூ.36,000/- ஊக்கத்தொகையும் , ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள்  19 மாணவ /மாணவிகளுக்கு ரூ.1,33,000/- ஊக்கத்தொகையினை, விருதாக வழங்கினார்கள்.

ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவிக்கையில், 1965ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் துவங்கப்பெற்ற தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம் தற்சமயம் 18 அலகுகளுடன் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றது. இந்நிறுவனம் மர, எஃகு அறைகலன்கள் பொருட்கள், உயர் மின் அழுத்த கோபுரங்கள், ஸ்பிரிட்டை மூலப் பொருளாகக் கொண்ட மருத்துவ பொருட்களான சர்ஜிகல் ஸ்பிரிட், டி-நேச்சர்ட் ஸ்பிரிட், டிஞ்சர் செட்ரிமைடு, பொவிடோன் அயோடின், ஸ்பிரிட்டை அடிப்படையாகக் கொண்ட தொழில் பொருட்களான காஸ்கெட் ஷெல்லாக், பிரென்ச் பாலிஷ், தின்னர் மற்றும் கிருமி நாசிகளான லைசால், பெனாயில், ஆழ்துளை கிணறு கைப்பம்புகள் மற்றும் இதர பொருட்களை தயாரித்து அளித்து வருகின்றது.

அக்டோபர், 2021 வரை சுமார் ரூ.60 கோடி வரை பணி ஆணைகள் பெறப்பட்டு உற்பத்தி நடைபெற்று வருகின்றது.  மேலும், பள்ளிக் கல்வித் துறையிடமிருந்து ரூ.15 கோடி, இந்திய மருத்துவத் துறையிடமிருந்து ரூ.5 கோடி மற்றும் பழங்குடியினர் நலத் துறையிடமிருந்து ரூ.4 கோடி என மொத்தம் ரூ.24 கோடி மதிப்பில் பணி ஆணைகள் பெறப்பட்டு, நடப்பாண்டில் இந்நிறுவனம் சுமார் ரூ.100 கோடி மதிப்பில் உற்பத்தி மற்றும் விற்பனையினை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.  

இந்நிகழ்ச்சியில் முதன்மைச் செயலாளர் டான்சி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் எஸ்.விஜயகுமார் இ.ஆ.ப, குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண்ராய் இ.ஆ.ப டான்சி பொது மேலாளர்  ஆர்.ஜெயபாரதி உட்பட பலர்  கலந்துகொண்டனர்.


Tags : Danzi ,Minister ,Annalarasan , Tamil Nadu
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...