×

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த விவகாரம் அரசுக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும்: ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை

சென்னை: தமிழக முன்னாள் பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவர் அமைச்சராக இருந்த காலத்தில், ரூ.7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். அதனால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் வழங்கியது. இந்நிலையில்,  மூன்றாவது நீதிபதி நிர்மல்குமார் அமர்வில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை எதிர்த்தும், உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில், ஆகஸ்ட் 19ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, வழக்கை உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி விசாரிக்கலாம். ஆனால் தீர்ப்பு வழங்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்ததோடு, இதுகுறித்து கேவியட் மனுதாரர் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, ராஜேந்திர பாலாஜியின் வழக்கை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி விசாரிக்கலாம், ஆனால், தீர்ப்பு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தடை உத்தரவு என்பது விசாரணையை முன்னேற்றி செல்வதற்கு தடையாக உள்ளது.

அதனால், அதனை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கடந்த 9ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும். அதுகுறித்து நீதிமன்றத்தில் கடிதமும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Rajendra Balaji ,Supreme Court , The government should be given an opportunity to respond to the issue of amassing wealth in excess of income: Rajendra Balaji's request to the Supreme Court
× RELATED மக்களவை தேர்தல்: ஐஸ் தயாரிப்பு முதல்...