×

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மின்சார ரயில்கள் ரத்தானதால் பயணிகள் கடும் அவதி: மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்

சென்னை: சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, நேற்று, 31 மற்றும் நவம்பர் 7ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.40 மணி முதல் மாலை 3.40 மணி வரை 4 மணி நேரம் 26 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதுவும், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் தி.நகர், வண்ணாரப்பேட்டை உள்பட பல்வேறு வணிக தளங்களுக்கு வேகமாகவும், குறைந்த கட்டணத்திலும் குடும்பத்துடன் செல்வதற்கு மின்சார ரயில் போக்குவரத்தையே சென்னை மக்கள் பெரிதும் நம்பி உள்ளனர். பண்டிகை மற்றும் மாத இறுதி வாரம் என்பதால், வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான துணிகளை வாங்கி வரலாம் என்று செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், கிண்டி, சைதாப்பேட்டை போன்ற பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், ரயில் நிலையங்களுக்கு வந்துள்ளனர்.

ஆனால், முறையான அறிவிப்பு நடைமேடையில் அறிவிக்காததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து ரயில்கள் வரவில்லை. இதனால், பொதுமக்கள் வேறுவழியின்றி அங்கிருந்து ஆட்டோ அல்லது பஸ்சில் ஏறி தி.நகர், புரசைவாக்கம் போன்ற பகுதிகளுக்கு கடும் சிரமத்திற்கு மத்தியில் சென்றடைந்தனர். அதன்பிறகு பிற்பகலில் ரயில்கள் இயக்கப்பட்டாலும் கூட்ட நெரிசலில் தொங்கிய படியே பயணம் செய்தனர்.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில்:  பண்டிகை காலங்களில் வீட்டிற்கு தேவையான பொருட்களை விடுமுறை நாட்களில் தான் பொதுமக்கள் வாங்க செல்வார்கள். இப்படி திடீரென காலையில் இருந்து மின்சார ரயில்களை ரத்து செய்தால் எப்படி. அதற்கு ஏதாவது மாற்று ஏற்பாடுகள் செய்தால் நன்றாக இருக்கும். இதுபோன்ற நாட்களில் எக்ஸ்பிரஸ் ரயில் வழித்தடங்களில் மின்சார ரயில்களை இயக்கினால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். எனவே, இதற்கு மாற்று ஏற்பாடு செய்யவேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Deepavali , Deepavali festival
× RELATED நெருங்கும் தீபாவளி பண்டிகை: பட்டாசு உற்பத்தி பணிகள் சிவகாசியில் தீவிரம்