×

பேரவை தேர்தல் வியூகம் வகுக்க கோவாவில் 2 நாள் முகாம் போடும் மம்தா: கட்சி தாவும் காங். தலைவர்களால் திருப்பம்

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோவா பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதால், கட்சி நிர்வாகிகளை சந்திக்க மேற்குவங்க முதல்வர் மம்தா கோவா செல்ல உள்ளார். உத்தரபிரதேசம், கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. கோவாவில் நடைபெற்று வரும் பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக இறங்கி களப்பணியாற்றி வருகின்றன. முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சில மூத்த தலைவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி வருவதால், காங்கிரஸ் கட்சியின் இடத்தை பிடிக்க ஆம்ஆத்மி, திரிணாமுல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவாவின் முன்னாள் முதல்வர் லூயிசினோ ஃபலேரோ,  அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் கட்சியில் இணைந்தார்.

அங்கு  அவருக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் கோவா மற்றும் திரிபுராவில் திரிணாமுல் கட்சி கால் பதித்து  வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக்  பானர்ஜி, கோவாவில் தங்கள் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இருந்தாலும்,  சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வரும் 28ம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இரண்டு நாள் பயணமாக கோவா செல்கிறார். அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து, தேசிய அரசியலில் மம்தா பானர்ஜி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இவ்வாறாக கோவா தேர்தலில் திரிணாமுல் கட்சி முதன்முதலாக களம்காண உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Mamata Banerjee ,Goa , Mamata Banerjee to camp in Goa for 2 days to divide Assembly election strategy Twist by leaders
× RELATED சந்தேஷ்காலியில் வெடிபொருள்...