குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்: அச்சத்தில் பெற்றோர்

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம், ஆதனூர் கிராமத்தில், 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் அங்கன்வாடி மையம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.  குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கடந்த 1990ம் ஆண்டு முதல் அங்கன்வாடி மையம் இயங்குகிறது. இங்கு ஆதனூர் கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர். சிமென்ட் ஷீட்டால், மேற்கூரை அமைக்கபட்ட இந்த கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது.

மழை காலங்களில், தண்ணீர் ஒழுகி, உள்ளே குளம்போல் தேங்குகிறது. இதனால், குழந்தைகளை மையத்துக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, இந்த கட்டிடத்தை கடந்த 2013-14ம் ஆண்டு கட்டிட புனரமைப்பு பணி என்ற பெயரில் பல ஆயிரம் செலவு செய்து, சீரமைக்கப்பட்டது. ஆனால், அதில் கையாடல் மட்டுமே நடந்துள்ளது. எவ்வித பணிகளும் நடக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தற்போது கொரோனா பரவலால் அங்கன்வாடி மையம் இயங்காமல் இருந்தது.

தற்போது கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் காலை ஒரு மணி நேரம் மட்டும் குழந்தைகளை வரவழைத்து சத்துணவு வழங்கபடுகிறது. வரும் பருவமழை காலத்தில் மையத்தின் மேற்கூரையில், தண்ணீர் கசிந்து வகுப்பறை முழுவதும் மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. மேலும் குழந்தைகளுக்கு உணவு சமைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆதனூர் கிராமத்தில் இயங்கும் அங்கன்வாடி மைய கட்டிடம் பழமையானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்டிடம் இடிந்து விழும் நிலைக்கு மாறியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுகுறித்து அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்துவிட்டோம்.

ஆனால், யாரும் கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதேநிலை நீடித்தால், கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆதனூர் அங்கன்வாடி மையத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றனர்.

Related Stories:

More