கோ-ஆப்டெக்ஸில் பண்டிகை கால சிறப்பு விற்பனை: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர், பஜார் வீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பண்டிகை கால சிறப்பு முதல் விற்பனையை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் புதிய துணி ரகங்களை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது, `தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூர் விற்பனை நிலையத்திற்கு இந்த ஆண்டு ரூ1.25 கோடி விற்பனை குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவு திட்டத்தின்படி, வாடிக்கையாளர்களிடமிருந்து மாதந்தோறும் ரூ300 முதல் ரூ5 ஆயிரம் வரை 10 மாத தவணைகள் பெறப்படுகிறது. 11 மற்றும் 12வது மாத தவணைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துகிறது. கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு ரக துணிகளை வாங்கி பயன்பெறலாம்.

தீபாவளி சிறப்பு தள்ளுபடி 30 சதவீதம் வசதியுடன் அரசு ஊழியர்களுக்கும் தவணை முறை கடன் விற்பனை வசதியும் உள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் வாங்கி அதை பயன்படுத்தி நெசவாளர்களின்

வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் (தணிக்கை) குணசேகரன், விற்பனை நிலைய மேலாளர் துளசிதாஸ், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: