திருவொற்றியூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள், விளம்பர போர்டு அகற்றம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில்  சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள், கடைகளின் விளம்பர போர்டுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். திருவொற்றியூர் மண்டலம் 12வது வார்டுக்கு உட்பட்ட சாத்தங்காடு பிரதான சாலையை தனியார் பலர் ஆக்கிரமித்து திருமண மண்டபம், கடை மற்றும் கடைகளின் விளம்பர போர்டுகள் அமைத்திருந்தனர். இதனால் மாநகர பேருந்து, பிற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி  அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், திருவொற்றியூர் மண்டல அலுவலர் பால்தங்கதுரை, செயற்பொறியாளர் உசேன், உதவி செயற்பொறியாளர் ஆனந்தராவ் மற்றும் உதவி பொறியாளர்கள், சாத்தங்காடு பிரதான சாலை பகுதிக்கு போலீசாருடன் வந்தனர். பின்னர், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட கடைகள், கடைகளின் விளம்பர போர்டுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் சாத்தங்காடு பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது. மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து  கடை கட்டினாலோ, விளம்பர போர்டு வைத்திருந்தாலோ அவற்றை அப்புறப்படுத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: