கோயில்களை வைத்து பாஜ அரசியல் செய்யக்கூடாது.! மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப கோயில்கள் திறக்கப்பட்டுள்ளது: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை:சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பாகவும் ஆய்வு நடத்தினார். அப்போது இணை ஆணையர் காவேரி உடன் இருந்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: அனைத்து மதத்தினரும் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் வழிபாட்டு தலங்கள் திறக்க உத்தரவிட்ட முதல்வரை அனைத்து மதத்தினரும் நெஞ்சம் நிறைந்து பாராட்டி வருகின்றனர். கோயில்கள் திறக்க, பாஜக கொடுத்த அழுத்தம் தான் காரணம் என அக்கட்சி கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

கட்டுப்பாடு இல்லாத ஆட்சிக்குதான் அழுத்தம் தேவைப்படும். ஆய்வு கூட்டம் நடத்திய பிறகே கோயில்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பாஜ அழுத்தத்திற்கு அடிபணியும் ஆட்சி கிடையாது. மக்களுக்கு அழுத்தம் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில்களை வைத்து பாஜ அரசியல் செய்யக்கூடாது. மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப கோயில்கள் திறக்கப்பட்டுள்ளது.புளியந்தோப்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கே.பி.பார்க் குடியிருப்பு கட்டிடம் உறுதியாக உள்ளது. பூச்சு வேலையில் தான் தவறு நடந்துள்ளது என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பை கட்டிய பிஎஸ்டி ஒப்பந்த நிறுவனத்துக்கு இனி ஒப்பந்தம் தரப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: